ஆவணம் ஆகுமா அன்பழகனின் ஆட்சிக் கொள்கை?: அச்சாரமிட்ட செய்தித் துறை!

politics

மறைந்த முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அரசின் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்டது. நிதித் துறை அமைச்சராக இருந்த அவருடைய பணிகளை நினைகூரும் வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித் துறைக் கட்டடத்தில் அவருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்துவைத்தார்.

மேலும், க.அன்பழகன் எழுதிய 42 நூல்களை நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் உத்தரவிட்டார். அதற்கான உரிமைத் தொகையாக 25 லட்சம் ரூபாயை பேராசிரியரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியின் இன்னுமொரு முக்கிய அம்சமாக, அன்பழகனின் வாழ்க்கை தொடர்பான காணொலித் தொகுப்பு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. முதலமைச்சர் ஆர்வத்துடன் முழுமையாக அதைப் பார்த்தார்.

திருவாரூரி��் பிறந்தது முதல், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, பங்கேற்ற போராட்டங்கள், அமைச்சரானது, திராவிடர் இயக்கக் கொள்கை எப்படி தன்னை இயக்கும் சக்தியாக அமைந்தது, திமுகவில் தன்னைவிட இளைய கருணாநிதி தன்னைவிட எப்படி மேம்பட்டவர் என்பதை அவரே கூறிய பல தருணங்களில் ஒருமுறை பேசியது என 5 நிமிடம் 8 நொடிகளுக்கு, இரத்தினச் சுருக்கமான காட்சித் தொகுப்பாக அது உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்ற கணிசமானவர்கள், அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த காட்சியைக் கண்டு மெய்சிலித்தனர். குறிப்பாக, திமுகவின் தலைவர்களில் ஒருவராக இருந்து அதிமுகவின் மூத்த தலைவராக மரணமடைந்த நாவலர் நெடுஞ்செழியனுடன், அன்பழகன் பேசிக்கொண்டு கையை வீசி தலைமை மிடுக்குடன் நடந்துவரும் காட்சி, என்ன கம்பீரம்!

அதைப்போலவே, திமுக தலைவர் கருணாநிதி ஒரு மேடையில் நின்றிருக்க, இவர் அவருடன் போய் சேர்ந்துகொள்ளும்போது, இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான 76 ஆண்டுக் கால நட்பைக் காட்ட, அந்த உடல்மொழி ஒன்றே போதும்.

பல வண்ணப் படக் காட்சி காலகட்டத்தில் இருவரையும் ஒருசேர அருகில் பார்த்தவர்களுக்கும்கூட, இந்த கறுப்பு வெள்ளைக் காட்சி நெகிழ்ச்சியை உண்டாக்கும்.

அரசுத் தரப்பில் தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தயாரித்திருக்கும் இந்தக் காட்சித் தொகுப்பு, மறைந்த அன்பழகனின் வாழ்க்கைத் தடங்களை அடுத்த தலைமுறையினருக்கு சுருக்கமாக எடுத்துக்காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும் நல்வாழ்வுத் துறை, பிரிக்கப்படாத கல்வித் துறை, நிதித் துறை என முதன்மையான துறைகளில் அமைச்சராக இருந்தவரின் ஆட்சித் துறைப் பணிகளைப் பற்றி, ஒட்டுமொத்தப் படத்தில் அரை நிமிட அளவுக்கே குறிப்பிடப்படுகிறது. இவ்வளவுதான் இதில் குறிப்பிட முடிகிறதா அல்லது விழா அவசரத்துக்காக விரைந்து தயாரிக்கப்பட்டு, அதனால் விரிவாக இடம்பெறவில்லையோ தெரியவில்லை.

முதன்முறையாக சுகாதாரத் துறைக்கு அமைச்சரானதும் அந்தத் துறையின் பெயரை, மக்கள் நல்வாழ்வுத் துறை என தமிழில் மாற்றியது, பேராசிரியர் அன்பழகன்தான். உரிய கவனிப்பு இல்லாமல் பெயருக்கு இயங்கிவந்த உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளர்களுக்குத் தேவையான பணி முறை, அங்கீகாரத்தை வழங்கச் செய்தது போன்ற அவரின் பல நடவடிக்கைகள், வெளியில் தெரியாதவை.

மேலும், நாற்பத்து இரண்டு நூல்களை எழுதியவர் மட்டுமல்ல, தீவிரமான படிப்பாளியும்கூட. அமைச்சராக இருந்தபோதும் நாளோ, வாரமோ புத்தகம் படிப்பதற்கென குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடுபவர். தமிழ் மொழி, இலக்கியங்கள், இனம், பண்பாடு, தமிழர் சமயங்களின் தத்துவம், வைதீக – அவைதீகக் கோட்பாடுகள், தமிழர் மேம்பாடு என விடாத வாசிப்பைக் கொண்டிருந்தவர்.

இப்படி இன்னும் சொல்லப்படாத க. அன்பழகனின் வாழ்க்கை வரலாற்றை அவரின் நூற்றாண்டில் அரசின் சார்பில், சிறந்த ஆவணப்படமாக ஆக்குவது, கட்சிக்கொள்கையாளராக மட்டுமின்றி, ஆட்சிக் கொள்கையாளராக அவர் எந்த அளவுக்கு செயல்பட்டார் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கும் என்பது அவருக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும். அதற்கு இந்தக் காணொலித் தொகுப்பு அச்சாரமிட்டிருக்கிறது என்று சொல்வது மிகப் பொருத்தம்!

**-கதிர்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *