பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

politics

பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கச் சென்னை மாநகர் காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார்.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இருந்தபோதிலும் விபிஎன் என்ற தொழில்நுட்பம் மூலம் பலர் இதை விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகப் பேசிக் கொண்டே விளையாடியதுடன் ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும் புகார்கள் வந்தன.

இந்த புகாரின் பேரில் மதன் மீது ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த மதனைத் தருமபுரியில் வைத்து ஜூன் 18ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு மதன் தாக்கல் செய்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் நேற்று (ஜூலை 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில், விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாலும் மதனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தற்போது மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர் ஓராண்டு ஜாமீன் கேட்க முடியாது.

அதுமட்டுமின்றி இனி அவர், தமிழ்நாடு அறிவுரை கழகத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும், அப்போது மதன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான ஆதாரத்தை போலீசார் அறிவுரை கழகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *