என்.எஸ்: எளிமைக்கும் நேர்மைக்கும் நூற்றாண்டு விழா!

politics

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியுமான என். சங்கரய்யாவின் 100 ஆவது பிறந்தநாள் இன்று (ஜூலை 15)கொண்டாடப்படுகிறது.

1964ல் 32 பேர் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அவர்களில் இன்று 2 தலைவர்கள் இருக்கின்றனர். ஒருவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், மற்றொருவர் சங்கரய்யா ஆவார்.

எளிமையும் போராட்ட குணமும் கொண்ட சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மட்டுமல்ல பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கொண்டாடுகிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை குரோம்பேட்டையிலிருக்கும் சங்கரய்யாவின் இல்லத்துக்கு சென்று சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதை ஒட்டி முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“தமிழக அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி, தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.

8 ஆண்டுகள் சிறைவாசம், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என, இன்னல்களை இன்முகத்துடன் எதிர்கொண்டு, தியாகத்தின் அடையாளமாக விளங்கும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சங்கரய்யா, திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர். தேர்தல் அரசியலில் திமுகவுடன் உடன்பட்டும் முரண்பட்டும் இருந்தாலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெருமதிப்புக்குரிய தலைவராவார்”என்று நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, மதநல்லிணக்க முனைப்பு இவற்றுக்காகத் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாக அவர் நின்றதை மறக்க முடியாது. பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் சொத்தாகத் திகழ்கிறார்.

வாழும் வரலாறாக நூறாவது பிறந்த நாள் காணும் சங்கரய்யா, மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி, வாழ்த்துகளைப் பெற்றுள்ளேன். முதலமைச்சர் என்ற முறையில் தமிழக மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *