தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடி தலைமையிலான அதிமுக அப்படி ஆகும், இப்படி ஆகும் என்று யூகங்கள் உலவிக் கொண்டிருக்கும் நிலையில்… இதற்கெல்லாம் மே 12 ஆம் தேதி பதில் சொல்லியிருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேராமல் அதிமுக தனது தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து சந்தித்தது.
தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே அதிமுகவோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாகவும் திரை மறைவிலும் பல முயற்சிகள் செய்தது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் இந்த முயற்சிக்கு இடம் கொடுக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெறாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அதிமுக தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை அமைத்தார்.
இதனால் அதிமுக மீதான பாஜகவின் ரியாக்ஷன்கள் தேர்தல் களத்தில் வெளிவர ஆரம்பித்தன.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை , ‘தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவின் தொண்டர்கள் அண்ணன் டிடிவி பக்கம் வந்து விடுவார்கள்’ என்று கூறினார்.
அதேபோல எடப்பாடியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சி ஆதரவோடு இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் தானே என்று உரிமை கொண்டாடி வரும் சசிகலா தனது இணையதளம் மூலமாக ஒரு விண்ணப்ப படிவத்தை வெளியிட்டு அதை நிரப்பி அனுப்புமாறு தொண்டர்கள் நிர்வாகிகளை வேண்டினார்.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் மே 12 ஆம் தேதி தனது 70ஆவது பிறந்த நாளை சேலத்தில் கொண்டாடினார் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதே நாளில், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு,
’ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக செங்கோட்டையன் கைக்கு போகிறதா வேலுமணி கைக்கு போகிறதா என்பது தெரியவரும்’ என்று விமர்சித்தார்.
இதற்கிடையே சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேறு வகையான ஒரு செய்தியை சொல்கின்றன.
மே 11ஆம் தேதியிலிருந்து சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அமைந்துள்ள எடப்பாடி இல்லத்துக்கு அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். மே 12ஆம் தேதி தங்களது மாவட்டங்களில் பொதுச்செயலாளர் எடப்பாடி பிறந்த நாளுக்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருப்பதால் கணிசமானோர் மே 11ஆம் தேதியே அவரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு புறப்பட்டனர்.
மே 12ஆம் தேதி காலை 8 மணி முதல் தனது வீட்டு போர்ட்டிகோவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை நின்று கொண்டே பெறத் தொடங்கினார் எடப்பாடி. பகல் 12 மணி ஆன பிறகு கால் வலிக்கிறது என்று சொல்லி அமர்ந்து கொண்டார்.
பல்வேறு மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள், இரண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் திரண்டனர்.
அதிமுக ஐடி விங்கின் மாநில செயலாளர் ராஜ் சத்யன் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் நிறைய கரும்புகள் மற்றும் பழங்களை ஏற்றிக்கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு நிறுத்தி அவரை திகைக்க வைத்தார்.
இப்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள் பயிர்கள் பழங்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக கொண்டு வந்து எடப்பாடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
எடப்பாடிக்கு என்னதான் பாஜக நெருக்கடி கொடுத்தாலும், அந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவருடைய பிறந்தநாள் விழாவே இதற்கு பதில் சொல்வது போல அமைந்துவிட்டது.
கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளும், இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் வெயில் காரணமாக தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்தும் இவ்வளவு பேர் திரண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அதிமுக எடப்பாடியின் கைகளில்தான் உறுதியாக இருக்கிறது என்கிறார்கள் சேலத்தில் இருக்கும் மாற்றுக் கட்சியினரே.
இதற்கிடையில் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் பகிரங்க முயற்சிகள் செய்த நிலையிலும், அதிகாரபூர்வ அதிமுகவான எடப்பாடி பழனிசாமிக்கே இரட்டை இலை ஒதுக்கப்பட்டது.
இதுபற்றி ஜெயநரசிம்மன் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்டதில்…அவருக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், “ஆணைய விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகள் படியே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது” என்று பதிலளித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின் அதிமுக யார் கையில் என்ற கேள்விக்கு, ஓரளவு பதிலை மே 12 ஆம் தேதி நடந்த நிகழ்வுகளே சொல்லியிருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
பங்குச் சந்தை: நேற்று நடந்ததும்.. இன்று நடப்பதும்! எந்த பங்குகள் ஏறுமுகத்தில்?