�பணியில் இறக்கும் போலீஸ் குடும்பத்துக்கு 25 லட்சம், அரசு வேலை!- கூடுதல் டிஜிபி பேட்டி!

politics

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியிலிருக்கும் தமிழக காவல்துறையினர் இறந்துவிட்டால் அவர்கள் குடும்பத்துக்கு நிதியும் வாரிசுக்கு வேலையும் உறுதி என்று உறுதியளித்துள்ளார் தமிழகக் காவல்துறையின் கூடுதல் டிஜிபி.

தமிழக காவல்துறையினர் பொதுவாகவே நேரம் காலம் பார்க்காமல் பணிசெய்துவருகிறார்கள். அதுவும் இந்த கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டிலிருந்தாலும் காவல்துறையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்புப் பணியிலும், ஊரடங்கை அமல்படுத்தும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்தாலும் போலீஸாருக்கும், அவர்தம் குடும்பங்களுக்கும் நெஞ்சத்தில் குமுறல்கள் பல இருக்கின்றன. அவற்றை போலீஸார் தங்களது வாட்ஸப் குழுமங்களில் வெளிக்கொட்டி தங்கள் வேதனைக்கு கொஞ்சம் வடிகால் தேடிக்கொள்கிறார்கள்.

“ஆசிரியர்கள் பணிசெய்யாமல் வீட்டிலிருக்கிறார்கள், அவர்களுக்கு முழு ஊதியம் உண்டு. ஆனால், காவல்துறையினர் வார விடுப்பு இல்லாமல் இரவு பகலுமாக வேலை செய்துவருகின்ற நிலையில், எங்களுக்கு ஊக்கத்தொகையும் இல்லை, கூடுதல் ஊதியமும் இல்லை என்று. எங்களுக்கு கிடைக்கிற பரிசு கொரோனா தொற்றுதான்.

இம்மாதம் 2021 மே 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் போலீஸார், எஸ்.எஸ்.ஐ, எஸ்.ஐ, மற்றும் டிஎஸ்பி உட்பட 33 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களின் மரணத்தைவிட கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் காவல் துறையினர்களின் மரணம் எண்ணிக்கைதான் அதிகம். அதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. மேலும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பது பற்றியும், ஓய்வு கொடுப்பது பற்றியும் அதிகாரிகளும் அரசும் அதிகமாகக் கவனம் செலுத்தவேண்டும். அப்படி கண்டுகொள்ளாமல் விட்டால் காவலர்களின் மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

தற்போது ஊரடங்கை முழுவதுமாக அமல்படுத்தி வரும் காவலர்களின் பாதிப்பு எண்ணிக்கை, வரும் காலங்களில் அதிகரிக்கும் சூழல்கள் உள்ளது.

காவல்துறையினரை முன்களப்பணியாளர்களாக அறிவிக்கவில்லை. மருத்துவர்களை மட்டும் அறிவித்திருப்பதால் அவர்கள் இறந்தால் 25 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகை 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் வழங்கப்படுகிறது, எங்களுக்கு எதுவும் இல்லை” என்று குமுறல்களை கொட்டித்தீர்த்து வருகிறார்கள்.

மாவட்டங்களில் தடுப்பு பணியிலிருக்கும் போலீஸார்களிடம் அவர்களின் பணி விவரம் பற்றிக் கேட்டோம்.

“தினம் காலை 7.30 மணிக்கு டூட்டிக்கு போவோம். இரவு 9.00 மணிக்கு வீட்டுக்குப் புறப்படுவோம். கேஸ் வந்துவிட்டால் அல்லது பந்தோபஸ்து வந்துவிட்டால் வீட்டுக்கு போகமுடியாது. இரவு டூட்டி பார்ப்பவர்கள் காலை 7.30 மணிக்கு வந்துவிட்டு மறுநாள் மதியம் 2.00 மணிக்கு வீட்டுக்கு போய்விட்டு மீண்டும் இரவு 8.00 மணிக்கு டூட்டிக்கு வந்துவிடுவார்கள். வாரத்தில் விடுப்பு என எதுவும் இல்லை.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணி செய்யும் போலீஸார்கள் சுழற்சி முறையில் நைட் டூட்டி பார்ப்பதுபோல், சுழற்சி முறையில் அனைவருக்கும் கொரோனாவும் வந்துபோய்விட்டது. அதில் சிலர் இறந்துவிட்டார்கள். தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை”என்றனர்.

சென்னை மாநகர் போலீஸாரிடம் பேசினோம். “காலை 7.00 மணிக்கு டூட்டிக்கு போய்விட்டு மதியம் 1.00 மணிக்கு வீட்டுக்குப் போவோம். வேலை இருந்தால் நிலையத்திலேயே இருந்துவிடுவோம். மாலை 5.00 மணிக்கு டூட்டிக்கு வந்தால் வீடு செல்வதற்கு இரவு 10.00 மணியாகிவிடும். நைட் டூட்டி பார்ப்பவர்கள் மாலை 7.00 மணியிலிருந்து மறுநாள் காலை 9.00 மணிவரையில் டூட்டி பார்பார்கள். யாருக்கும் வார விடுப்பு இல்லை விஐபி, விவிஐபி பாதுகாப்பு டூட்டிகளுக்கு போய்விட்டால் 24 மணி நேரமும் டூட்டி பார்ப்போம்” என்றனர்.

மேற்குறிப்பிட்ட வழக்கமான பணிகளை எல்லாம் தாண்டி இப்போது எந்த கணக்கும் இல்லாமல் போலீஸார் ஊரடங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் போலீஸாரின் குமுறல்களையும், அவர்களது தேவைகளையும் தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணனிடம் மின்னம்பலம்.காம் பத்திரிகை சார்பாக முன்வைத்து விளக்கம் கேட்டோம்.

“காவல்துறை ஒரு சேவைத்துறை. தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் தமிழக காவல்துறையினர் கடினமாகப் போராடிவருகிறார்கள். அவர்களின் கஷ்டங்களை டிஜிபி, முதல்வர், என்னைப் போன்ற அதிகாரிகள் உணர்கிறோம், பார்க்கிறோம், அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்.

காவல்துறையினரைக் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை. அதை நாங்கள் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. கொரோனா வைரஸ் தொற்று பணியிலிருக்கும் காவலர்களுக்கு அந்தந்த மாவட்ட எஸ்.பி,கள், மாநகரத்தில் உள்ள டி.சி.க்கள் மாஸ்க், கையுறை, சானிடைசர் வழங்கி வருகிறார்கள். அதற்கான உத்தரவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பணியில் இறப்பவர்களுக்கு 25 லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலையும் கொடுக்க சட்டம் உள்ளது. அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விரைவில் தமிழக அரசு அதை செயல்படுத்தும். மற்ற சலுகைகள் பாராட்டுகள் வழங்க ஆலோசித்துவருகிறோம். இன்னும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள் செய்வோம்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது பெரிய யுத்தம். அதில் வெற்றி பெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். தயவு செய்து வெளியில் தேவையின்றி வரவேண்டாம். மாஸ்க் அணிந்துசெல்லுங்கள், கையுறை பயன்படுத்துங்கள், இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். மக்களை காப்பற்ற ஒவ்வொரு நாளும் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறார் முதல்வர் . அவரது உத்தரவை காவல் துறை அதிகாரிகளும் காவலர்களும் நிறைவேற்றி வருகிறோம். குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இந்த நேரத்தில் சிறப்பாக இருக்கும்” என்றார் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் ஐபிஎஸ்.

போலீஸார்கள் குமுறல்களுக்கும் புலம்பலுக்கும் காவல்துறையின் கூடுதல் டிஜிபி ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவே நம்புவோம். விரைவில் காவலர்களை குளிரவைக்கும் அறிவிப்புகள் வரும்.

**-வணங்காமுடி**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *