வைஃபை ஆன் செய்ததும், ‘திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். இன்று ஏப்ரல் 12 ஆம் தேதி காலை முதல்வர் மு. க. ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்’ என்ற குறுஞ்செய்தி அப்டேட்டை அனுப்பியது வாட்ஸ்அப்.
பேஸ்புக் மெசஞ்சர் இதன் பின்னணி தகவல்களை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. சட்டமன்றத்தில், பொதுக்கூட்டங்களில், அல்லது தனிப்பட்ட சந்திப்புகளில் என அவர் இருக்கும் இடம் கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அன்றே பகலில் துரைமுருகன் துபாய் செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் எடுத்துச் செல்லாமல் பழைய பாஸ்போர்ட்டை எடுத்துச் சென்று விட்டதால் பயணம் செய்ய முடியாமல் திரும்பி விட்டார்.
மீண்டும் அன்று மாலையே சென்னை விமான நிலையம் சென்று துபாய் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டார் துரைமுருகன். ஆனால் திடீரென வியர்த்துக் கொட்ட தான் துபாய் செல்லவில்லை என்று சொல்லி விமானத்திலிருந்து இறங்கி விட்டார். உடல்நிலை சோர்வாக இருந்ததால் அங்கிருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனை சென்று சில நிமிடங்களில் வீடு திரும்பிவிட்டார் துரைமுருகன்.
பத்து நாட்கள் கழித்த நிலையில் இப்போது காய்ச்சல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட துரைமுருகன் வயது மூப்பு காரணமாக சில உடல் உபாதைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் விசாரித்தபோது, ‘துரைமுருகனுக்கு உடல் ரீதியாக பெரிய சிக்கல்கள் இல்லை. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக மனரீதியாக அவர் காயப்பட்டிருக்கிறார்’ என்கிறார்கள்
ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டமன்றத்தில் அவை முன்னவர், அமைச்சர் இவ்வளவு முக்கிய பதவிகளில் இருக்கும் துரைமுருகனுக்கு மனரீதியாக என்ன குறை என்று விசாரித்தால் டெல்லி வரை செல்கிறது.
துபாய் பயணம் செய்து அங்கிருந்து திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார் துரைமுருகன். ஆனால் துபாய் பயணம் ரத்தானதால் நேரடியாக டெல்லிக்கே சென்றார்.
டெல்லியில் பிரதமரை இந்த முறை முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில்தான் சந்தித்தார். அப்போது தானும் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலுவுக்கு போன் செய்த துரைமுருகன், ‘நான் கட்சியின் பொதுச்செயலாளர்யா. பார்லிமென்ட் பாஸ் எனக்கு ஒன்னு ரெடி பண்ணிடு’ என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் நாடாளுமன்றத்துக்குள் செல்வதற்கு துரைமுருகனுக்கு டி. ஆர். பாலு மூலமாக பாஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து துரைமுருகன் தனது மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் மூலம் பாஸ் வாங்கி நாடாளுமன்றத்துக்குள் சென்றார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தார் துரைமுருகன். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட துரைமுருகன், ’53 வருஷமாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன்’ என்று சொல்ல சபாநாயகர் பிர்லா ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அப்படியா அப்படியா என இரு முறை கேட்ட சபாநாயகர் துரைமுருகனிடம் மிகுந்த வியப்போடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனது மகன் கதிர் ஆனந்தின் கைகளை பிடித்துக் கொண்ட துரைமுருகன் அந்தக் கைகளை சபாநாயகர் கைகளில் வைத்து, ‘இவர் என் மகன். வேலூர் எம்பியாக இருக்கிறார். நீங்கள் தான் இவரை பார்த்துக் கொள்ள வேண்டும். வளர்த்துவிட வேண்டும்’ என்று துரைமுருகன் சொல்ல சபாநாயகர் பிர்லாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘நான் என்னங்க பண்ண முடியும். நான் இந்தச் சபைக்கு தான் சபாநாயகர்’ என்று பதிலுக்கு அவர் பேச உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார் துரைமுருகன்.
அதன்பிறகுதான் எம்பிக்கள் மத்தியில் இது பேசுபொருளாகியிருக்கிறது. ‘எவ்வளவு பெரிய சீனியர் அவரு. கட்சித் தலைவர் கிட்ட சொல்ல வேண்டிய வார்த்தைகளை சபாநாயகர்கள் கிட்ட போய் ஏன் சொல்றாரு?’ என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் எம்பிக்கள்.
இன்னும் சில எம்பிக்களோ, ‘ஐம்பத்தி மூன்று வருஷமாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொதுச் செயலாளருக்கு மக்களவை சபாநாயகர் என்ன செய்ய முடியும் என்று தெரியாதா? அவருக்கு தெரியும். ஆனால் தன் அங்கலாய்ப்பு, ஆதங்கம் ஆகியவற்றை யாரிடமாவது கொட்ட வேண்டும் என்ற மனநிலையில் அவ்வாறு சபாநாயகரிடம் பேசியிருக்கிறார்’என்கிறார்கள்.
திமுக தலைமையில் இது பற்றி விசாரித்தால், ‘கலைஞர் தலைவராக இருக்கும்போதே அவரிடம் உரிமையாக கோபித்துக் கொள்வதும் பிறகு சமாதானம் ஆவதும் துரைமுருகனின் வழக்கம்தான். ஸ்டாலின் தலைவரான பிறகும் முதல்வரான பிறகும் அந்த உரிமையை துரைமுருகன் விடவில்லை.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் துரைமுருகன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில்
வாக்கு எண்ணிக்கையின்போது துரைமுருகன் பின்னடைவை சந்திக்க கூடும் என்ற தகவல் கட்சித் தலைவருக்கு சென்றது. அப்போது அவர் உடனடியாக திமுக சட்டத்துறை வழக்கறிஞர்களிடம், ‘காட்பாடி தொகுதி மேல தீவிர கவனம் செலுத்துங்க. பொதுச்செயலாளர் ஜெயித்து சட்டமன்றத்திற்கு வரவேண்டும். அவங்க (அதிமுக)என்ன வேண்டுமானாலும் செய்ய தயாரா இருக்கறதா சொல்றாங்க. அதனால பார்த்துக்கங்க’ என்று அவ்வளவு அக்கறையோடு கட்டளையிட்டார்.
இன்று கூட துரைமுருகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் நேராக மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகுதான் சட்டமன்றம் சென்றார் முதல்வர்’என்கிறார்கள்.
ஆனாலும் துரைமுருகனின் மனது காயப்பட்டு தான் இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்” என்ற மெசேஜ் கொடுத்து சென்ட் ஆனது மெசஞ்சர்.