சசிகலாவுக்கு எதிராக கே.பி.முனுசாமி பேட்டி: பன்னீரிடம் ஆலோசித்தாரா?

politics

அதிமுகவை சரி செய்வோம் என்ற சசிகலாவின் பேச்சுக்கு வழக்கம்போலவே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ரியாக்ட் செய்திருக்கிறார்.

விரைவில் அதிமுகவை சரிசெய்வோம். கவலைப் படாமல் இருங்கள் என்று சசிகலா தொண்டர்களிடம் பேசிய உரையாடல் ஆடியோ கடந்த ஓரிரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.

சிறையில் இருந்தபோது தனக்கு கடிதங்கள் எழுதிய அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு சசிகலா இப்போது ஒவ்வொருவராக அழைத்துப் பேசி வருகிறார். அந்த வகையில் லாரன்ஸ், வினோஜ் சுரேஷ் போன்ற தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ அதிமுகவில் பரப்பை ஏற்படுத்தியது.

‘கொரோனா முடியட்டும் ஜாக்கிரதையா இருங்க. அவங்கள்லாம் சண்டை போட்டுக்குறது ரொம்ப கவலையா இருக்கு. நாங்கள்லாம் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சிப்பா இது. சீக்கிரம் வர்றேன். கட்சியை நல்லாகொண்டுவந்துவிடுவோம். கவலைப்படாதீங்க” என்று சசிகலா கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று ( மே31) அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று தனது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசினார். சசிகலா ஆடியோவுக்காகவே செய்தியாளர்களை சந்தித்தார் அவர். அப்போது,

“அதிமுக என்ற மாபெரும் இயக்கத்துக்கும் இந்த அம்மையாருக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. அந்த அம்மையார் இந்த கட்சியிலேயே இல்லை. மாறாக நன்றாக சென்று கொண்டிருக்கிற எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கக் கூடிய இந்த இயக்கத்தில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் இந்த அம்மையாரை முன்னிறுத்தி இதுபோன்ற கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஏற்படுத்தக் கூடிய குழப்பத்துக்கு ஒரே ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார். ஏனென்றால் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும், கட்சியின் பல்வேறு நிலை பொறுப்பாளர்களும் கடுமையாக போராடி இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வந்துகொண்டிருக்கிறார்கள். நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிற இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வழியில் திசை திருப்பி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துகளைச் சொல்லுகிறார்கள். நிச்சயமாக அவருடைய எண்ணம் ஈடேறாது.

அந்த அம்மையார் பேசியதை நானும் கேட்டேன். எந்தத் தொண்டனும் அவரைத் தொடர்புகொண்டு பேசவில்லை, மாறாக இவர்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகிறார். பேசுகிற தொண்டனும் அமமுகவைச் சேர்ந்த தொண்டன். ’அம்மா நீங்க வந்த ரேலியில நான் கலந்துகிட்டேம்மா’ என்று சொல்கிறார்.

சாதாரண நிலையில் இருந்த அந்தக் குடும்பம் இந்தக் கட்சியால்,அம்மாவால் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உயர்த்திய அம்மாவின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது அந்த குடும்பம் ஒதுங்கியிருப்பது நல்லது என்று கருதுகிறேன். இல்லையென்று சொன்னால் அந்த பழிபாவம் முழுதும் அந்த அம்மையாரை சேரும். எந்த சூழ்நிலையிலும் அந்த அம்மையார் இந்த இயக்கத்துக்குள் நுழைய முடியாது, நுழைய வாய்ப்பும் இல்லை. அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார் கே.பி. முனுசாமி.

ஜெயலலிதா மரணத்துக்கு முன்பிருந்தே கே..பி.முனுசாமி கட்சியில் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஓ.பன்னீர் செல்வம் 2017 ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது அதன் அடிப்படையிலேயே பன்னீரோடு இணைந்தார். பன்னீர் ஆதரவாளராகவே அறியப்பட்டார். தினகரனை புறக்கணித்து எடப்பாடி பழனிசாமியும் பன்னீரும் இணைந்த பிறகு கட்சியில் முனுசாமியின் முக்கியத்துவம் அதிகரித்தது. எடப்பாடிக்கும், பன்னீருக்கும் பிரச்சினைகள் வந்தபோது கூட முனுசாமிதான் சமாதான தூதராக செயல்பட்டார். ஏனெனில் இந்த இருவருக்குமிடையிலான பிரச்சினையால் சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான்.

ஆனால் சமீப காலங்களாக ஓ.பன்னீர் தேர்தலுக்கு முன்னும் பின்னும் சசிகலா ஆதரவு அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக அதிமுகவிலேயே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் எடப்பாடி சசிகலாவுக்கு எதிராகவே பேசி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று (மே 31) வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமி பேட்டியளிப்பதற்கு முன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும்தான் பேசினார் என்றும், இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீருடன் பேசவில்லை என்றும் தேனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஓ.பன்னீர் இனி சசிகலாவை ஆதரிக்கிற நிலைப்பாட்டை எடுத்தால் கே.பி.முனுசாமி அதற்கு எதிராகத்தான் இருப்பார் என்றும் அவர் எடப்பாடியை ஆதரிப்பார் என்றும் கூறுகிறார்கள்.

கேபி.முனுசாமி துணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சசிகலா பற்றி கூறியது அதிமுகவின் கருத்தா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என்ற விவாதம் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. தேனியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னை புறப்படும் நிலையில் கே.பி. முனுசாமியின் கருத்து அதிமுகவுக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *