y130 நாட்களில் 11 ஆயிரம் மரக்கன்றுகள்: பாமக சாதனை!

Published On:

| By admin

தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முக்கியமானவர்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும். அவ்வாறு மரம் நட்டு அதன் புகைப்படத்தை அனுப்புபவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவிப்பேன் என்று அறிவித்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.

அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 130 நாட்களில் 1401 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஏப்ரல் 11ஆம் தேதி டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் மரக்கன்று நடும் அனைவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறேன். அவர்கள் மட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பேசுகிறேன். அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிகிறேன். அதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவ்வாறு மரம் நட்டவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் நான் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறேன்.

புவிவெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகிய சவால்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், இன்றைய மிக முக்கியத் தேவை மரங்கள் தான். அதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சிறிய பங்களிப்பு தான் இதுவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share