பாஜகவுடன் கூட்டணி இல்லை: முஸ்லிம் கட்சிகளிடம் அமைச்சர் ஜெயக்குமார்

politics

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பெரிய கட்சிகளே தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதியாகத் தீர்மானிக்காதபோது சிறு சிறு கட்சிகள் முடிவெடுப்பதில் திணறி வருகின்றன.

குறிப்பாக, கடந்த சில தினங்களாகவே முஸ்லிம் கட்சிகளிடையே சில கேள்விகள் விவாதமாக நடந்து வருகிறது. அது என்னவெனில், அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்குமா, வைக்காதா என்பதுதான். அதன் அடிப்படையிலேயே முஸ்லிம் கட்சிகளின் அணிச் சேர்க்கை இருக்கும் என்பதே நிலைமை.

இதுகுறித்து முஸ்லிம் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாததாகிறது. இப்போது திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இருக்கின்றன. திமுக தற்போது சந்தித்து வரும் இந்து எதிர்ப்பு அரசியல் காரணமாக இனியும் அக்கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் மேலும் சேர வாய்ப்பு அறவே இல்லை என்பதே நிதர்சனம்.

அதேநேரம் தற்போது நாகை எம்.எல்.ஏ.வாக அதிமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, அதிமுக பாஜக கூட்டணி காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். மீண்டும் நாகை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்றுவிட வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம் லீக், மமக ஆகிய கட்சிகளோடு மஜகவுக்கும் திமுக இடம் கொடுக்குமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

இந்தச் சூழலில்தான் சில நாட்களாக முஸ்லிம் கட்சிகள் மீதான அதிமுகவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. நேற்று (ஆகஸ்ட் 8) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கூட, தேர்தல் நேரத்தில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஆக இப்போதைக்கு அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் இல்லை என்பதே முதல்வரின் பதிலில் உள்ள அர்த்தம். சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாத நிலையில் தங்கள் பக்கமும் சில முஸ்லிம் கட்சிகள் இருக்க வேண்டும் என்பது அதிமுகவின் எதிர்பார்ப்பு. அதனால் அதிமுக சார்பில் இப்போதே முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியின் சென்னை பிரமுகர்கள் சிலர் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் அவரை சந்தித்துள்ளனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி என்பது முக்கால்வாசி இருக்காது, அதனால் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு அதிமுகவுக்கு வேண்டும் என்று கூறி முஸ்லிம்களுக்கு அதிமுக செய்த நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளார். இதனால் அதிமுக – எஸ்டிபிஐ கூட்டணியா என்ற பேச்சு எழுந்திருக்கிறது. மேலும் தமிமுன் அன்சாரியையும் தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்ளவே அதிமுக விரும்புகிறது” என்கிறார்கள்.

பாஜகவை அதிமுகவிட்டாலும்… அதிமுகவை பாஜக அவ்வளவு லேசில் விட்டுவிடுமா என்ற கேள்விக்கான பதிலில்தான் முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு இருக்கிறது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *