போக்சோவில் சிவசங்கர் பாபா: கைது செய்ய வட இந்தியா சென்ற தமிழக போலீஸ்!

politics

பள்ளி மாணவிகளை பாலியல் வேட்டையாடியதாக சாமியார் சிவசங்கர்பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவரைத்தேடி தமிழக போலீசார் வட இந்தியா சென்றுள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. அவர் அப்பள்ளி மாணவிகளை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அப்பள்ளியின் முன்னாள் மாணவியான அமிர்தா மின்னம்பலம் யுட்யூப் சேனலில் விரிவாக பேட்டியளித்திருந்தார். சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையிடமும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் மாணவிகளிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் புகார்களின் அடிப்படையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிவ சங்கர் பாபா மீது மூன்று வழக்குகளை பதிவு செய்து விசாரணையை குற்றப்பிரிவு-குற்றவியல் விசாரணை துறைக்கு (சிபி-சிஐடி) மாற்றினார்கள்.

இது ஒருபக்கம் என்றால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தமிழக ஆணையம் (டி.என்.சி.பி.சி.ஆர்) இந்த புகார்கள் தொடர்பாக சிவசங்கர் பாபா, அப்பள்ளியின் முதல்வர், மூன்று ஆசிரியர்களை கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தது. ஆனால் சிவசங்கர் பாபா ஆணையத்துக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை.

இந்நிலையில் அந்த ஆணையத்தின் குழு பள்ளிக்கே விசாரணை நடத்த சென்றிருந்தது. அப்போது பள்ளி முதல்வருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று அதற்கான சான்றிதழை ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்தனர் பள்ளி நிர்வாகத்தினர். மேலும் சிவசங்கர் பாபா தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தகவல் வெளியிட்டார்.

இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான போலீஸார் சிவசங்கர் பாபாவை கைது செய்வதற்காக டேராடூன் விரைந்துள்ளனர். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிவசங்கர் பாபா தப்பிக்க பல முயற்சிகள் செய்து வரும் நிலையில் தமிழக போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதால், விரைவில் சிவசங்கர் பாபா கைது என்ற தகவல் இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் என்கிறார்கள் தமிழக காவல்துறை வட்டாரங்களில்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *