டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களைப் பெற்று அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 16) பிற்பகல் அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு வருகை தந்தார். சரியாக 12. 15 மணிக்கு டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக கேஜ்ரிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அப்போது, ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மனிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ராம் ஹுசைன், ராஜேந்திர பால் கவுதம் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். விழாவில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவிர, மற்ற தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
விழாவில் உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், “இது எனது வெற்றியல்ல. ஒவ்வொரு டெல்லி குடிமகனின், ஒவ்வொரு குடும்பத்தினரின் வெற்றி. கடந்த 5 வருடங்களில் டெல்லியிலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது முக்கியமல்ல. டெல்லியிலுள்ள 2 கோடி மக்களும் என்னுடைய குடும்பம். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “சிலர் கெஜ்ரிவால் எல்லாவற்றையும் இலவசமாக தருகிறார் என்று கூறுகிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு மதிப்புமிக்க விஷயமும் இலவசம் என்பதை இயற்கை உறுதிப்படுத்தியுள்ளது. கேஜ்ரிவால் மக்களை நேசிப்பதால் இலவசங்களை அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டவர்,
“ டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. டெல்லி வளர்ச்சி என்பதே கடந்த 5 ஆண்டுகளில் எங்களின் முக்கிய இலக்காக இருந்தது. வரும் நாட்களில் எங்களுடைய பணிகளை அதே வழியில் தொடர்வோம். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் இதில் பங்கேற்கவில்லை. தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுவிட்டார்.
**த.எழிலரசன்**�,