ஊழலுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போட்டி: கமல்

politics

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஊழலுக்கும், ஊழலுக்கும் இடையே நடக்கும்போட்டியைதான் தற்போது அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன், இன்று(பிப்ரவரி 16) பந்தயசாலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ” ஒருவருடம் கழித்து கோவைக்கு வந்துள்ளேன். நடுவில் வந்திருந்தாலும், அது பிரச்சாரத்திற்காக அல்ல. சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதாக தெரியவில்லை. நகரத்தில் எதுவும் செய்யப்படவில்லை, கழிவுநீர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, குடிநீர் தட்டுப்பாடு இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுவாணி தண்ணீரை விற்கும் திட்டத்திற்கு தடை விதிப்போம் என்றார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வியாபாரத்தை துரிதப்படுத்தியுள்ளார்களே தவிர, அதற்கு தடை விதிக்கவில்லை. இதுபோன்று பல்வேறு வாக்குறுதிகள், இல்லதரசிகளுக்கு வாக்குறுதிகள் என நாங்கள் அறிவித்த பிறகு அறிவித்தவர்கள். யார் சொல்லி நடந்தாலும் பரவாயில்லை, நல்லது நடந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருப்போம். அந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் யார் யாருக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இரண்டு கழகங்களுமே தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, பின்பு குப்பைகளைப் போல பெருக்கி தள்ளிவிட்டு, பழைய வியாபாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது ஊழலுக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டியைதான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அந்த விளையாட்டுக்கு வரவில்லை. நாங்கள் கடமையை செய்ய வந்துள்ளோம். ஊழலுக்கும், ஊழலுக்கும் நடக்கும் போராட்டத்தில் இரண்டு பேரும் விழுந்தாலும் சந்தோஷம்தான். எங்கள் பயமெல்லாம், ஊழல் மீண்டும் ஜெயிக்க நீங்கள் உதவியாக இருந்துவிடக் கூடாது என்பதான். அதை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு சார்பு இருக்கக் கூடாது. நீங்கள் மையமாக செயல்படவேண்டும். மக்கள் நீதி மய்யமாக இருக்க வேண்டுமென்றும் சொல்லவில்லை, மையமாக இருக்க சொல்கிறேன். எனக்கு இருக்கும் கடமைபோன்று, தமிழர்களாக இந்தியர்களாக உங்களுக்கும் கடமை இருக்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது எங்கள் கட்சிக்காரர்களை மிரட்டுவதும், உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் என்று சொல்வதும் எங்களுக்கு பாராட்டு கூட்டம் நடத்துவதுபோன்று பார்க்கிறோம். என்னை பார்த்து அடிக்கடி, குழந்தை தனமாக, அசட்டு தனமான யுக்தி ஒன்றை பயன்படுத்துகிறார்கள். கமல்ஹாசனுக்கு ஓட்டு போட்டுவிட வேண்டாம். பிறகு மோடி ஜெயித்துவிடுவார் என்று சொல்லி வருகிறார்கள். மோடி ஜெயிக்கவா இங்கே நான் வேலைக்கு வந்தேன். மோடி ஜெயித்தாலும், தோற்றாலும் எனக்கு கவலையில்லை. தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தேர்தலில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதற்கான யுக்தியை அவர் வைத்திருக்கிறார். அந்த யுக்திகள் எல்லாம் பலிக்கக் கூடாது என்பது தான் என் ஆசை. முதலில் என்னை பாஜகவின் பி டீம் என்று சொல்லி கொண்டிருந்தார்கள். தற்போது அவர் வந்தால், மோடி வந்துவிடுவார் என்று வீடு வீடாக சொல்லி வருகிறார்கள். பிரதமராக இருக்கும் மோடி எப்படி கவுன்சிலராக வருவார்.

கவுன்சிலர் பதவி என்பது நம் நாட்டுக்காக, நம் வீட்டுக்காக செய்யும் வேலை. அவர்கள் இதை வேடிக்கை பார்ப்பார்களே தவிர, இதற்கெல்லாம் ஆசைப்பட மாட்டார்கள்” என்று கூறினார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *