_மன்னிப்பா? முடியவே முடியாது: ராகுல்

politics

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் அமளி மற்றும் வெளிநடப்பைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் வன்முறை நடத்தையில் ஈடுபட்டதாக மாநிலங்களவை எம்.பி.க்கள் மொத்தம் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து மக்களவை, மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளைப் புறக்கணித்து இன்று காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்க மறுத்துவிட்டார்.

அதே சமயத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எம்.பி.க்கள் மன்னிப்பு கோரினால் சஸ்பெண்ட் நடவடிக்கையைத் திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

அதுபோன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “எம்.பி.க்கள் திரும்பி வர வேண்டும் என்றுதான் அவை விரும்புகிறது. ஆனால், ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று அவ்வாறு அவர்கள் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மாநிலங்களவை மற்றும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்பு எதற்கு?, நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? முடியவே முடியாது’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தச்சூழலில் சஸ்பெண்ட் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கையா நாயுடுவுக்குக் கடிதம் எழுத 12 எம்.பிக்களும் முடிவு செய்துள்ளனர்.

அதேசமயத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து நாளை முதல் தர்ணாவில் ஈடுபடவுள்ளனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் அறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரெக் ஓ’பிரைன் கூறுகையில், “ டிசம்பர் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காந்தி சிலை முன் எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபடுவார்கள். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திரிணமூல் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்” என்றார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *