முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நேற்று நடந்தது. மொத்தம் 69 இடங்களில் நடந்த சோதனையில், 2 கோடியே 16 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல், வெள்ளி பொருட்கள், வழக்கிற்குத் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
நேற்று மாலை சோதனை நிறைவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுகவை அழிக்கும் நோக்கத்தோடும், பழிவாங்கும் நோக்கத்தோடும் நடத்தப்பட்ட ரெய்டு இது. என் வீட்டிலிருந்து என்னுடைய செல்போனை மட்டும்தான் எடுத்துச் சென்றுள்ளனர். வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை.
இந்தச் சோதனையின் உள்நோக்கம் என்னவென்றால், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜி, பொதுத்தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன்பாக கரூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்கிறார். க.பரமத்தி பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு அதிமுக பரமத்தி ஒன்றிய பெருந்தலைவரும் அங்கே சென்றார். அப்போது, அவரைப் பார்த்து செந்தில் பாலாஜி, இன்னும் மூன்று மாதம்தான். நானே இந்த துறைக்கு அமைச்சராகப் போகிறேன். அமைச்சரானதற்குப் பிறகு இந்த துறை அமைச்சரை மட்டுமல்ல, அவரது மகன், மனைவி என அனைவரையும் கருவறுப்பேன் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அப்போதே எனக்குத் தகவல் வந்தது.
2012ல் எனது மகனின் திருமணத்துக்காக, பத்திரிகை வைக்க, முன்பே அலைப்பேசியில் கேட்டுவிட்டு, மனைவியுடன் சென்று அவரது வீட்டில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அப்போது அவர் பின் வாசல் வழியாகப் போய்விட்டார்.
அவரது சுயரூபம் தெரிந்து பதவியிலிருந்து செந்தில் பாலாஜியைத் தூக்கிவிட்டு, அந்த பதவியை எனக்கு வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து 5 ஆண்டு காலம் அவருக்குப் பதவி வழங்கவில்லை. அதன்பின் எந்தெந்த கட்சிகளுக்கு அவர் போனார் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்தக் கோபத்தையெல்லாம், திமுக தலைமையிடம் சொல்லி ரெய்டு நடத்தவைத்துப் பழிவாங்கப் பார்க்கிறார். ஆனால் எத்தனை செந்தில் பாலாஜி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. எப்.ஐ.ஆரில் 4.85 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக நான் சொத்து சேர்த்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டதுதான் தற்போதும் உள்ளது. என் மகன் நேர்மையாகத் தொழில் செய்கிறார். சரியாக ஆடிட்டிங் கணக்குகளை வைத்திருக்கிறார். அதனால், நீதிமன்றத்தில் இதைச் சந்தித்துக்கொள்வேன். நீதி மீது நம்பிக்கை உள்ளது.
இந்த சோதனைக்குக் காரணம் செந்தில் பாலாஜிதான். அதிமுக தலைமை எங்களுக்கு ஆதரவாக உள்ளது. செந்தில் பாலாஜியின் சுயரூபம் குறித்து திமுகவுக்கு இன்னும் தெரியவில்லை.
கிரிப்டோகரன்சியில் நான் முதலீடு செய்திருப்பதாக எப்.ஐ.ஆரில் சொல்லியிருக்கிறார்கள். அது யூகத்தின் அடிப்படையில் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் எப்படி முதலீடு செய்வது என்றே தெரியாது. என் வீட்டில் 2.16 கோடி கைப்பற்றப்பட்டதாகச் சொல்வது போல இதையும் சொல்லியிருக்கிறார்கள். இது தவறான செய்தி. முழுமையாக விசாரிக்கட்டும். இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறினார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி இன்று டெல்லி சென்றுள்ளார். மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை நேரில் சந்தித்து 10,000 டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மின்சார திருத்தச் சட்டம் என 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒரு மாதிரியும், தங்கமணி ஒரு மாதிரியும் இந்த ரெய்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் இந்த மூன்று பேரும் கலந்து பேசி ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது போல், ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் யார் தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வரலாற்றில் ஊழல் பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையைத் தங்கமணி பெற்றுள்ளார். கண் பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோகரன்சிக்கும் தங்கமணி முதலில் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதைவிடுத்து என் மீது குற்றம்சாட்டுகிறார். புரிதல் இல்லாமல் பேசுகிறார் தங்கமணி.
வடசென்னையில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. அதுபோன்று தூத்துக்குடியிலும் நிலக்கரி காணாமல் போயுள்ளது. அவர் தவறு செய்யவில்லை என்று சொன்னால், 2011, 2016, 2020 தேர்தல் சமயத்தில், தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலிருந்த சொத்து மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, அதை தெளிவுபடுத்திக்கொண்டு அவர் பேச வேண்டும். எங்கிருந்து வருமானம் வந்தது. எங்கிருந்து சொத்து மதிப்பு அதிகரித்தது என்று சொல்ல வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
அதுபோன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
**-பிரியா**
�,