What was Governor Ravi doing for 3 years

3 வருடங்களாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்!

அரசியல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களின் மீது முடிவெடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று (நவம்பர் 20)  தலைமை நீதிபதி சந்திர சூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. What was Governor Ravi doing for 3 years

ஏற்கனவே கடந்த நவம்பர் 10 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

இந்த பின்னணியில் இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். மத்திய அரசு, ஆளுநருக்காக அட்டர்னி ஜெனரலான மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆஜர் ஆனார்.

தலைமை நீதிபதி முன்னிலையில் வாதம் தொடங்கியது.

தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய அபிஷேக் மனு சிங்வி, “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 15 மசோதாக்களை தற்போதுவரை முடிவு எதுவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார்” என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, “ஆளுநரிடம் தற்போது ஐந்து மசோதாக்கள்தானே நிலுவையில் இருக்கின்றன?” என்று கேட்டார்.

அதற்கு அபிஷேக் மனு சிங்வி, “ஆளுநர் கடந்த 13 ஆம் தேதி திருப்பி அனுப்பிய பத்து சட்ட மசோதாக்களையும் தமிழ்நாடு சட்டமன்றம் 18 ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றி அன்றே ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே இப்போது ஆளுநரிடம் 15 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி, “ஆம் மீண்டும் நிறைவேற்றப்பட்டாலும் அது இன்னும் நிலுவையில்தான் உள்ளது” என்றார்

அபிஷேக் மனு சிங்வி, “சட்டமன்றத்தில் தவறான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும்.. அதை நிறைவேற்ற சட்டமன்றத்துக்கு உரிமை உண்டு, ஆனால் அதில் கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய இன்னொரு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ஆளுநர் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்து அதை திருப்பி அனுப்புகிறார் என்றால், என்ன காரணத்துக்காக திருப்பி அனுப்புகிறார் என்ற காரணக் குறிப்பை தர வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் 200 அதைத்தான் சொல்கிறது. ஆனால் ஆளுநர் திருப்பி அனுப்பும்போது ஏன் என்பதற்கான எந்த காரணத்தையும் குறிப்பாக எழுதவில்லை” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நவம்பர் 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 13 ஆம் தேதி ஆளுநர் பத்து சட்ட மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். கடந்த 2020 ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் இருந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு ஆளுநர் பத்து மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார். அப்படியென்றால் கடந்த மூன்று வருடங்களாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார்? ஏன் இதுபோன்ற விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வரவேண்டும்?” என்று ஆளுநர் மீது அதிருப்தி தெரிவித்தார் தலைமை நீதிபதி சந்திர சூட்.

அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல்  வெங்கட் ரமணி, “ தமிழ்நாடு விவகாரம் பற்றி நான் ஒரு குறிப்பை தங்கள் முன் வைத்துள்ளேன்” என்று தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, பஞ்சாப் வழக்கில் எங்கள் தீர்ப்பு இந்த வாரமே பதிவேற்றப்படும் என்றார். மேலும்,  தமிழ்நாடு வழக்கை வெள்ளிக் கிழமை விசாரிக்கலாமா என்று கேட்டார்.  பிறகு வழக்கறிஞர்களின் வசதிக்கேற்ப வழக்கு  டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. What was Governor Ravi doing for 3 years

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் விசாரணை எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *