New year 2024 Indian politics

புத்தாண்டு நன்மை தரட்டும்! நல்லாட்சி தொடரட்டும்! முற்போக்கு சிந்தனை மலரட்டும்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

காலத்தை நாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாகப் பகுப்பதும் அதனடிப்படையில் வரலாற்று அசைவுகளை விவாதிப்பதும் மிகப் பரவலான போக்காகும். செய்தித்தாள்களில் பார்த்தால் ஐம்பதாண்டுகளுக்கு முன் இன்றைய தினத்தில், நூறாண்டுகளுக்கு முன் இன்றைய தினத்தில் என்று நிகழ்வுகளைப் போடுவார்கள்! ஒவ்வோர் ஆண்டிலும் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்று சிறப்பு மலர் வெளியிடுவார்கள். ஒவ்வொரு பத்தாண்டிலும் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன தொகுத்துக்கொள்வார்கள். வரலாற்றாசிரியர்கள் நூறாண்டுக் கால அளவை வைத்துக்கொண்டு வரலாற்றை பகுத்து எழுதுவார்கள்.

இந்திய அரசியல் நோக்கர்களுக்கு 2024ஆம் ஆண்டு முக்கிய ஆண்டாகும். இந்திய தேசியத்தின் இருவேறு போக்குகள் முழுமையாகத் திரண்டு பொதுத்தேர்தலில் மோதிக்கொள்ளும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகிறது. பன்மைத்துவ இந்தியாவா, இந்துத்துவ இந்தியாவா என்பதுதான் அந்த மோதல். மத அடையாள தேசியம் என்பது பல்வேறு வகைகளில் பிற்போக்கானது என்பதால் முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பன்மைத்துவ இந்தியாவுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

அதென்ன முற்போக்கு, பிற்போக்கு? இதெல்லாம் தேய்வழக்கு இல்லையா என்று சில நண்பர்கள் நினைப்பார்கள். இல்லவே இல்லை. முற்போக்கு, முன்னேற்றம் என்பதற்கு ஒரு வரலாற்றுவாத பொருள் இருக்கிறது. அது என்னவென்றால் மக்களிடம் அதிகாரம் பரவ வேண்டும் என்பதுதான். மக்களாட்சியில் பல்வேறு தளங்களில் அதிகாரப் பரவலாக்கம் நிகழ்ந்து சுயாட்சி-கூட்டாட்சி என்ற அடிப்படையிலேயே அரசுகள் அமைய வேண்டும் என்பதுதான்.

அப்படியானால், பிற்போக்கு என்பது என்ன? பிற்போக்கு என்பது இறையாண்மை அடிப்படையிலான தேசியம். அது அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவித்து ஆதிக்கமாக மாற்ற விரும்புவது. தேசியத்துக்கு வெளியிலும், உள்ளேயும் எதிரி அடையாளங்களைக் கட்டமைத்து அந்த அடையாளத்துக்கு எதிரான பெரும்பான்மை கருத்தொப்புமை, பாசிச அணியாக்கத்தை மேற்கொள்ளத் துடிப்பது.

முற்போக்கு அரசியல் அதிகாரப் பரவலை செயல்படுத்துவதால் அது சமூக முரண்களை அங்கீகரிக்கும்; பல்வேறு சமூகப் பகுதிகளின் நலன்கள் முரண்படும் என்பதை ஏற்றுக்கொண்டு, ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய முயற்சி செய்யும். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்புகள் உருவாக வேண்டும், எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும்.

இந்திய அளவில் இன்று பாஜக பிற்போக்கு அரசியலை முன்னெடுக்கிறது. முஸ்லிம்கள், சிறுபான்மையர்களை விலக்கிய இந்து அடையாளத்தைக் கட்டமைத்து, பெரும்பான்மைவாத அரசாக மாற முனைந்துள்ளது. பாகிஸ்தானை வெளி எதிரியாக கட்டமைப்பது அதற்கு அனுசரணையாக உள்ளது. பாபர் மசூதி இருந்த இட த்தில்தான் ராமர் கோயில் இருந்தது, அதுதான் ராமர் பிறந்த இடம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து அந்த மசூதியை இடித்துத் தள்ளப்பட வகை செய்து, அந்த இடத்தை கையகப்படுத்தி அங்கே ஒரு கோயிலையும் கட்டி விட்டது. அந்தக் கோயிலை இப்போது திறந்து வைக்கப் போகிறது. அது இந்துத்துவ அணியின் எழுபத்தைந்து ஆண்டுக் கால வேலைத்திட்டம்.

காங்கிரஸ் இப்போது முற்றிலும் ஒரு புதியதோர் அரசியல் பாதையை, முற்போக்குப் பாதையை தேர்ந்துள்ளது. அது ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அனைத்து ஜாதி மக்களும் சமூக வாழ்வில் பங்கேற்க இயல்கிறதா, அவர்களது முன்னேற்றம் தடை பட்டுள்ளதா என்று அறிய விரும்புகிறது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து கூட்டாட்சியை வலுப்படுத்த விரும்புகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச மாத வருவாயை உத்தரவாதம் செய்ய விரும்புகிறது. காங்கிரஸ் அதன் வீச்சு அனைத்து மாநிலங்களிலும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, மாநில கட்சிகளுடன் இணைந்து இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணியை (Indian National Development Inclusive Alliance – INDIA) உருவாக்கியுள்ளது. பாஜக தானும் ஒரு கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியை வைத்திருப்பதாகச் சொன்னாலும், அந்த அணியில் வலுவான மாநில கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

New year 2024 Indian politics

மீண்டும் உயிர்பெறும் மண்டல் x மந்திர் அரசியல்

நான் முற்போக்கு, பிற்போக்கு என்று கூறுவதன் சுருக்கெழுத்தாக எண்பதுகளின் இறுதியில் மண்டல் எதிர் மந்திர் என்ற அரசியல் உருவானதை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது வி.பி.சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முன்னணி ஆட்சி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அமலாக்கம் செய்தது. இதற்கான பரிந்துரையை வழங்கியது பி.பி.மண்டல் என்பவர் தலைமையிலான கமிஷன் என்பதால் இது மண்டல் கமிஷன் பரிந்துரை என்று அழைக்கப்பட்டது.

இன்று ஏறத்தாழ அனைவராலும் முற்போக்கான ஒரு முடிவு என்று ஏற்றுக்கொள்ளப்படும் இந்த முடிவு, அது அமலுக்கு வந்த ஆண்டு கடும் எதிர்ப்பை முன்னேறிய வகுப்பினரிடமிருந்து சந்தித்தது. டெல்லியில் ஆதிக்க ஜாதி மாணவர்கள் தெருவில் இறங்கி போராடினர். ஒருவர் தீக்குளித்தார். அந்த நேரத்தில் பிளவுபடும் “இந்து” அடையாளத்தை ஒன்றுபடுத்த, மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையில் எடுத்து ரத யாத்திரை ஒன்றை தொடங்கியது பாஜக. குஜராத்தில் யாத்திரையை தொடங்கிய அத்வானி, அயோத்தி நோக்கி சென்றார். பீஹாரில் லாலு யாதவ் அவரை கைது செய்ததால் பி.ஜே.பி,  வி.பி.சிங் அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. ஆட்சி கவிழ்ந்தது.

இவ்வாறு மண்டல் பரிந்துரைகளால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடம் ஏற்பட்ட எழுச்சியை ராமர் கோயில் பிரச்சினையால் மடைமாற்றியதன் அடிப்படையில் இந்த அரசியல் எதிர்தரப்புகள் மண்டல் x மந்திர் என்றும் சில சமயம் மண்டல் x கமண்டல் என்றும் கூறப்படுவது வழக்கம்.

முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் இந்தியா கூட்டணி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக செய்வோம் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் செல்வாக்கான பதவிகளில் மிகவும் குறைவாக இடம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி அந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் கூறியிருப்பது மீண்டும் மண்டல் கமிஷனின் லட்சியத்தை நோக்கி அரசியலை நகர்த்துகிறது. இடையில் இட ஒதுக்கீடு தத்துவம் நீர்த்துப் போகும்படி ஆதிக்க ஜாதி ஏழைகளுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையைத்தான் 2024இல் மீண்டும் மண்டல், மந்திர் முரணரசியல் அரங்கேறுவதாக பலரும் கூறுகின்றனர். நம்முடைய வார்த்தைகளில் அதனை பன்மைத்துவ தேசியத்துக்கும், இந்துத்துவ தேசியத்துக்கும், முற்போக்கு அரசியலுக்கும், பிற்போக்கு அரசியலுக்குமான முரணாக அடையாளப்படுத்துகிறோம். புத்தாண்டு நாளில் முற்போக்காளர்களின் விருப்பும் பன்மைத்துவ தேசியம் மலர வேண்டும் என்பதாகத்தானே இருக்கும்!

New year 2024 Indian politics

திராவிட மாடல் தி.மு.க அரசின் நல்லாட்சி தொடரட்டும்!

இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு வகையில் தி.மு.க அரசு இந்தியாவுக்கு மாடலாக, திராவிட மாடலாக விளங்குகிறது. மகளிர் உதவித்தொகையை தி.மு.க நிறைவேற்றியது பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அதை செய்தால், மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு மகளிர் உதவித் தொகை அறிவித்ததன் மூலம் தேர்தலில் வெற்றியடைந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது தி.மு.க அரசு. இதுவும் மெள்ள, மெள்ள இந்தியா முழுமைக்கும் பரவும் என்பதில் ஐயமில்லை. பழங்குடியினர், நரிக்குறவர் பிரச்சினைகளில் குறிப்பான கவனம் செலுத்தி நிவாரணங்கள் வழங்கியுள்ளது அரசு. தொடர்ந்து மேன்மேலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது அரசு. இல்லம்தோறும் கல்வி என்றார்கள், நான் முதல்வன் திட்டம் என்றார்கள். இப்போது “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்றொரு திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர்.

சிறு நகரங்களில் அனைத்து அரசுத்துறைகளும் விசேஷ முகாம்களில் மக்களை சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை பெறுகிறார்கள். பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள். தேர்தல், வாக்குறுதி, வாக்குகள் என்றில்லாமல் எல்லா காலங்களிலும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி அரசு இயந்திரம் இயங்க வேண்டும் என்பதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது தி.மு.க அரசு. இந்தியா கூட்டணியின் முற்போக்கு நோக்குக்கான நல்லதொரு முன்னுதாரணமாக தி.மு.க அரசு விளங்குவதால் அது அந்த அணிக்கு மிகுந்த வலுவைச் சேர்க்கிறது.

ஊடகங்களின் பணி அரசை விமர்சிப்பதுதான் என்பதில் உண்மையிருக்கிறது. நிச்சயம் எந்த அரசும் குறைகளேயின்றி இயங்க முடியாது; மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த நம் மாநிலத்தில் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் ஒரே மூச்சில் தீர்த்திடவும் முடியாது. அதனால் தொடர்ந்து குறைகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது அவசியம்.

அதே சமயம், குறைகளைச் சுட்டிக்காட்டும்போதே, நிறைகளைக் குறித்தும் பேச வேண்டும் என்பதை மறப்பது ஆபத்தானது. அதுவும் தேர்தல் களத்தில் அ.இ.அ.தி.மு.க, பாஜக ஆகியவற்றை தி.மு.க எதிர்கொள்ளும் நேரத்தில் அந்த கட்சிகளின் ஆட்சிகளோடு ஒப்பீட்டு ரீதியாகவும் விமர்சிப்பது அவசியம். பாஜக-வின் ஒன்றிய ஆட்சியிலும் சரி. அது ஆளும் மாநிலங்களிலும் சரி, நடக்கும் நிர்வாக குளறுபடிகள் ஊடகங்களால் கவனப்படுத்தப்படுவதில்லை. அதேபோல அ.இஅ.தி.மு.க ஆட்சியுடன் ஒப்பிட்டு தி.மு.க அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவதும் இல்லை.

எந்த ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் எல்லா கட்சிகளும் ஒன்று, தி.மு.க-வும், அ.இ.அ.தி.மு.க.-வும் ஒன்று என்று பேசுவதுதான் நடுநிலை என்று ஊடகங்கள் நம்புவது தகாது. அதை நிறுவுவதற்காக தி.மு.க ஆட்சியின் பிழைகளை பூதாகாரமாக்குவதும். அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் குறைபாடுகளை மூடி மறைப்பதும் நடுநிலை என்று நம்பப்படுவது கண்டிக்கத்தக்கது.

உதாரணமாக சமீபத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தையே எடுத்துக்கொள்ளலாம். அரசு இயந்திரமும் சரி, தி.மு.க அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை கடுமையாக களத்தில் இறங்கி வேலை செய்தார்கள். முந்தைய ஆட்சிக்காலத்தைவிட பன்மடங்கு அதிகம் மழை பெய்தாலும், தி.மு.க அரசு அதை எதிர்கொண்டு சேதங்களின் அளவை குறைத்துள்ளது. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. விமர்சனங்கள் பெருகிய அளவு பாராட்டுகள் பதிவாகவில்லை.

பாஜக-வை எடுத்துக்கொள்வோம். கவர்னர் மாளிகைக்கு முன் தெருவில் யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினால், அது கேட்டைக் கூட எட்டாத நிலையிலும், அது ஏதோ கவர்னர் மாளிகையையே தாக்கிவிட்டதாக கூப்பாடு போட்டவர்கள், நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்ளேயே புகுந்து அவை நடக்கும்போது அவையில் குதித்து தாக்குதலை சிலர் நட த்தினால் கண்டும் காணாமல் போக வேண்டும் என கூறுகிறார்கள்.

இப்படித்தான் சென்ற தேர்தலின்போது புல்வாமா என்ற இட த்தில் தீவிரவாதிகள் ராணுவத்தினரை தாக்கியபோது, எப்படி அப்படி ஓர் ஊடுருவல் நடக்க பாஜக ஆட்சி எப்படி இடம் கொடுத்தது என்ற விமர்சனம் உருவாகாமல், தேச பக்தி சொல்லாடல் உருவாகி பாஜக ஆதரவு பெருகியது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்தால் பாஜக காங்கிரஸ் கட்சியை பாதுகாப்பு குறைபாடு என்று குற்றம்சாட்டியிருக்கும். பொது மன்றம் முன்முடிவுகள் சார்ந்து இயங்காமல் விமர்சன சிந்தனை சார்ந்து இயங்குவது அவசியம் என்பதையே இது போன்ற சார்பு நிலைகள் காட்டுகின்றன.

சிந்தனையாளர்கள் நிலைகளை சீர்தூக்கிப் பார்த்து எழுத வேண்டும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் நல்லாட்சிகளும், முற்போக்கு சிந்தனைகளும் வளம் பெற வேண்டும் என்பதே அரசியலில் அக்கறை கொண்டோர் விருப்பமாக இருக்கும்!  

கட்டுரையாளர் குறிப்பு:

 

New year 2024 Indian politics by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: திருமணத்துக்குப் பின் எடை அதிகரிக்காமல் இருக்க…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரைச் சாறு

புத்தாண்டு பார்ட்டி பஸ்: அப்டேட் குமாரு

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *