பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களாக ஏற்பட்ட மின்தடை இன்று முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. சென்னையின் மின் விநியோக தேவை என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் தேவையை விட அதிகரித்திருக்கிறது. 2019-20 காலகட்டத்தில் 3738 மெகா வாட் மின்சார சேவை பயன்படுத்தப்பட்டதே அதிகளவில் இருந்துள்ளது. 2020-21 காலகட்டத்தில் 3127 மெகா வாட் மின்சார தேவை இருந்தது. தற்போது 4016 மெகா வாட் மின்சாரம் தேவை உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வரக்கூடிய ஆண்டுகளில் மின்சார தேவை அதிகரித்தாலும் எந்தவித தடையும் இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும்.
சென்னையில் 66 மில்லியன் யூனிட் ஆக இருந்த மின்சார தேவை தற்போது 90 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கேபிளை மாற்றி புதிய கேபிளை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதால் மின் தடை ஒரு சில இடங்களில் ஏற்படுகிறது.
மின்வெட்டுக்கும் மின் தடைக்கும் வித்தியாசம் உள்ளது. மின்வெட்டு என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லை என்றால் ஏற்படுவதாகும். மின்தடை என்பது நிர்வாகத்தின் பராமரிப்பு பணிகளுக்காக ஏற்படுவது ஆகும். சென்னையில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நேற்று பாதி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதுமாக குறைத்திட அறிவுறுத்தியுள்ளேன்” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செல்வம்
கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு!
கர்நாடகா முதல்வர் அறிவிப்பு எப்போது? ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்!