சென்னையில் கேலோ இந்தியா போட்டி துவக்க விழா, திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் வழிபடுவதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணம் மேற்கொள்வதை அடுத்து 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று (ஜனவரி 19) முதல் 31- ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.
அதற்காக, பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரும் மோடிக்கு வழிநெடுகிலும் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
கேலோ இந்தியா தொடக்க விழாவிற்கு பின்னர் இரவு 7.45 மணிக்கு காரில் செல்லும் பிரதமர் மோடி இரவில் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
அங்கு தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி மட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் குவிப்பு!
சென்னையில் பிரதமர் வருகையை முன்னிட்டு கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆர்.சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு) மேற்பார்வையில் சுமார் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம், விமான நிலையம், ஆளுநர் மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ராமேஸ்வர பயணத்திட்டம்!
ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர் நாளை (ஜனவரி 20 ) காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் பஞ்சகரை ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
பின்னர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். அன்று இரவு அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
மறுநாள் (ஜனவரி 21) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து மதுரை செல்லும் மோடி, தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையால் சென்னையை போன்று திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் – வாகனங்களுக்கு தடை!
திருச்சிக்கு பிரதமர் செல்வதையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகளை நேற்று மாலை முதல் நாளை (ஜனவரி 20) மதியம் வரை மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று மாலை 6.00 முதல் நாளை மதியம் 02.30 மணி வரை பாதுகாப்பு நலன் கருதி பக்தர்கள் பொது தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை.
மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு பிரதமர் செல்லும் வழியில் சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதி,
உத்தர வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!
இதே போன்று பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் கூடுதல் காவல் துறை இயக்குனர் மேற்பார்வையில் 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ராமநாதசுவாமி கோயிலில் நாளை (ஜனவரி 20) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 12 மணி முதல் 21 ஆம் தேதி வரை பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (ஜனவரி 21) காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு நாட்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் மேலும் ஒரு எம்.பி!
சூர்யா படத்தில் நடிக்கும் ஶ்ரீதேவியின் மகள்!
துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை! : உயர்நீதிமன்றம்