பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை போலீஸ் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டிற்கு இன்று வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் பிரதமர், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றைக் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து விமானம் மூலம் மைசூருக்கு சென்று இரவு தங்கி விட்டு நாளை நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்கிறார்.
பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை வரவேற்க தமிழ்நாடு பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
பிரதமரின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு அவர் செல்லும் இடங்கள் மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், பல்லாவரம் அல்ஸ்ட்ராம் மைதானம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள், சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு, ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையை சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ட்ரோன்கள் மற்றும் ஆளிலில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் செல்லும் இடங்களுக்கு அருகே உள்ள ஹோட்டல், நட்சத்திர விடுதிகள், லாட்ஜ்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததற்கும் எம்பி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் வருகையின் போது காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் போலீசார் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்காக காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து “go back modi” என்று அச்சிடப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மோனிஷா
IPL 2023: டாஸ் வென்று லக்னோவிடம் வெற்றியை பறிகொடுத்த ஐதராபாத் t-lsg
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!