அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொருளாளர் பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட செயற்குழு/பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பன்னீர் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2665 உறுப்பினர்களில் 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து, பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பன்னீர் பக்கம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சில உறுப்பினர்களே இருக்கின்றனர்.
இந்நிலையில், பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்ட நிர்வாகிகளே இன்று (ஜூலை 9) எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக அவரது சொந்த தொகுதியான போடி தொகுதி உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் இருந்து இன்று சென்னை வந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துவிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மொத்தம் 62 பேர் தேனி மாவட்டத்தில் இருக்கிறோம். அவர்களின் 42 பேர் இங்கு வந்துள்ளனர். மீதமுள்ளவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் கொடுத்துள்ளனர். அம்மாவின் மறைவுக்குப் பிறகு இரட்டை தலைமை உருவானது. ஆனால் இன்று ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமிதான் வரவேண்டும் என தேனி மாவட்ட அதிமுக கிளை செயலாளர்கள் முதல் மாவட்ட கழக நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகின்றனர். ஓபிஎஸ் கட்சிக்கு தேவையில்லை, அவர் அதிமுகவைக் கெடுத்துவிடுவார்” என்றனர்.
ஓபிஎஸ் தொகுதியான போடி இளைஞரணி செயலாளர் லெனின் பேசுகையில், போடி ஒட்டுமொத்த தொகுதி சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
நாளை மறுதினம் பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில் சொந்த தொகுதி நிர்வாகிகளே ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவிக்காதது பன்னீருக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவொருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவுக்காக உற்சாகத்துடன் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வர தொடங்கியுள்ளனர்.
-பிரியா