டிஜிட்டல் திண்ணை:  முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின்… அமித் ஷாவிடம் ஆளுநர் ரவி: அடுத்து என்ன?

Published On:

| By Aara

Stalin to Murmu Governor Ravi

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் ஆளுநர் மாளிகை பொங்கல் விழா போட்டோக்கள் வந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் இருந்து வேகவேகமாக வெளியேறியதன் பின்னால் ஆளுநருக்கு எதிர்ப்பு ஆளுநருக்கு ஆதரவு என இரு தரப்பு விவாதங்கள் வெடித்து வருகின்றன.

அதிமுக, பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Stalin to Murmu Governor Ravi

திமுக, கூட்டணிக் கட்சிகள் மற்றும் பல கட்சிகள் ஆளுநருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ‘ஆளுநரை தனிப்பட்ட முறையில் தாக்கும்படியான விமர்சனங்கள் கூடாது’ என்று அறிவுரை வழங்கினார்.

ஆனாலும் கெட் அவுட் ரவி என்ற போஸ்டர்கள் திமுகவினரால் ஒட்டப்பட்ட., அதே வார்த்தைகள் சமூக தளங்களில் டிரண்டிங் ஆக்கப்பட்டன.

ஏற்கனவே  முதல்வர் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  ஆளுநரைப் பற்றி எந்த வித தனிப்பட்ட விமர்சனத்திலும் திமுகவினர் இறங்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார் முதல்வர்.

மேலும்  அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில், ‘ஆளுநருக்கு எதிராக மாநிலத்தில்  போராட்டம் நடந்தாலும் சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு  10, 11 தேதிகளில் தஞ்சை, திருவையாறு  தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்துகொள்ள பயணப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி சில விமர்சனங்களை பொதுவெளியில் வைத்திருக்கிறார் ஆளுநர். மேலும் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்ற வாசகங்களையும் படிக்கத் தவிர்த்துவிட்டார்.

Stalin to Murmu Governor Ravi

இந்த நிலையில் ஆளுநர் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை காரணமாகக் கொண்டு ஏதேனும் செயல் திட்டங்களை வகுத்திருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டுதான் ஆளுநரின்  பயணத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்தது மாநில அரசு.

10 ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றார் ஆளுநர்.

அங்கே கலெக்டர், எஸ்பி ஆகியோர் வரவேற்ற நிலையில் திமுகவின் மேயர் ஆளுநரை வரவேற்க செல்லவில்லை. திருச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்றார். அங்கேயும் திமுக மேயர் ஆளுநரை வரவேற்கவில்லை.

அரசியல் ரீதியாக இப்படி எதிர்ப்பை தெரிவித்தாலும் அரசு ரீதியாக நிர்வாக ரீதியாக ஆளுநருக்கு கடுமையான பாதுகாப்பை வழங்கியது தமிழ்நாடு போலீஸ். 

ஆளுநர் திருச்சி, தஞ்சாவூர் விசிட்டின் போது அங்கே உள்ள அச்சகங்களுக்கு போலீஸார் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை அச்சடிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டனர்.

மேலும் தஞ்சையில் இருந்து திருவையாறு ஆளுநர் நிகழ்ச்சி நடக்கும் பகுதி வரை  போலீஸார் குவிக்கப்பட்டனர்.

எந்த அமைப்பும் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதிலும் தீவிர கவனம் செலுத்தியது போலீஸ். அதையும் மீறி எஸ்டிபிஐ கட்சியினர் தஞ்சை ரயிலடி அருகே  ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

2018 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஞ்சாவூர் வந்தபோது எதிர்க்கட்சியான திமுக கடுமையான போராட்டம் நடத்தியது. மற்ற அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தினர்.

பன்வாரிலால் புரோகித் தங்கியிருந்த சர்க்யூட் ஹவுஸுக்குள்ளேயே அப்போது போராட்டக் காரர்கள் நுழைந்தனர்.

ஆனால்  இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி வரும்போது அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் பக்கமே யாரும் போக முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இப்படி ஆளுநருக்கு பாதுகாப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொண்ட அதேநேரம் முதல்வர் ஸ்டாலின்… சட்ட அமைச்சர் ரகுபதி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு கடிதத்தையும் எழுதினார்.

அதை ஜனவரி 12 ஆம் தேதி  சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,  மக்களவை திமுக கொறடா ஆ.ராசா, எம்பிக்களான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஆளுநர் உரையின்போது நடந்தவற்றை விளக்கியுள்ளார்.  “ஆளுநர் பதவி என்பது மாநிலத்தின் உயர்ந்த அரசியல் சாசன பதவியாகும். நாங்கள் ஆளுநரை உயர்ந்த பீடத்தில் வைத்திருக்கிறோம்.

அதேநேரம் ஆளுநர் என்பவர் அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசோடு அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் மோதல் போக்கை பின்பற்றுகிறார்.  இது அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது. 

அவர் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் கலாசாரம், தமிழ் இலக்கியங்களுக்கு எதிரான கருத்துகளை  வெளிப்படையாக பேசி வருகிறார்.  அவர் சட்டமன்றத்தில் செய்தது என்பது பொது வெளியில் அவர் ஏற்கனவே செய்தவற்றின் தொடர்ச்சிதான்.

ஏற்கனவே அவர் தமிழ்நாட்டு மக்களின் நலன் தொடர்பான முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தின் இறுதியில்,

‘தமிழ்நாடு என்பது எப்போதுமே வெளி மாநில, வெளிநாட்டு மக்களை இன்முகத்தோடு வரவேற்கும் மாநிலமாகும்.  மிகச் சிறந்த விருந்தோம்பலுக்கு புகழ் பெற்றது தமிழ்நாடு.

பல மதங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் இங்கே நட்புணர்வோடு வாழ்கிறார்கள். ஆனால், ஆளுநர் ரவியின் பேச்சுகள் தமிழ்நாட்டின் தனித்துவ பன்முகத்துவ சிந்தனைகளுக்கு எதிராகவும் மாநிலத்தில் நிலவும் அமைதிக்கு எதிராகவும் இருக்கின்றன’ என்று அழுத்தமாக  குறிப்பிட்டுள்ள முதல்வர்,  ‘ஜனநாயகத்தின் பல்வேறு தூண்களுக்கு இடையே சுமுக உறவு நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ஆனால், அவரவரது கடமைகளை ஆக்கபூர்வமான முறையில் ஆற்ற வேண்டும்’ என்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் திடீர் தீர்மானம் வாசித்து அனைவரையும் அதிர வைத்த ஸ்டாலின்… அடுத்தடுத்த நடவடிக்கைகளில் வேகம் காட்டாமல் அரசியல் நிதானத்தோடு  இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக கூறுகிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.

‘ஏற்கனவே ஆளுநரிடம் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர் மோதல் போக்கில் ஈடுபடும் இந்த ஆளுநரை மாற்ற வேண்டும்’ என்று டெல்லியில் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகள் செய்து வருகிறது.

அதேநேரம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனவரி 9 சம்பவத்துக்குப் பிறகு ஜனவரி 12  ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில், ‘இந்த ஆளுநர் மாளிகையே மினி தமிழ்நாடு போல இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

மேலும் சட்டமன்ற சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக ஜனவரி 13 ஆம் தேதி டெல்லி செல்கிறார். அங்கே அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் வரை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வது என்று ஆளுநர் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில். 

முர்முவிடம் முறையிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  ஆளுநரோ அமித் ஷாவிடம் முறையிடப் போகிறார். அமித் ஷாவின்  உத்தரவுப்படியே ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்ற மெசேஜுக்கு  செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஆவின் கூல்டிரிங்ஸ் : அமைச்சர் நாசர் கொடுத்த அப்டேட்!

தமிழில் பாஸ் என்றால் மட்டுமே அரசு வேலை!