கடந்த வாரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ள மணீஷ் சிசோடியா, பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருந்தபடி அவர் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் வழக்கில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு மார்ச் 20ஆம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அவரிடம் கடந்த 2 நாட்களாக விசாரித்து வந்த அமலாக்கத்துறையினர் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் சிசோடியாவை கைது செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
எதிர்காலம் கல்வி அரசியலுக்கானது!
இந்நிலையில் சிறையிலிருந்தபடியே ‘கல்வி அரசியல் vs சிறை அரசியல்’ என்ற தலைப்பில் மணீஷ் சிசோடியா எழுதியுள்ள கடிதத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த கடித்தத்தில், ”பாஜகவின் பிரச்சனை கல்வி அரசியல் தான். அவர்கள் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதை விட தேசங்களை உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பள்ளிகள் சீர்குலைந்து கிடக்கின்றன. அதனால் அந்த மாநிலங்களின் முதல்வர்கள் இப்போது கல்விக்காக தாங்கள் செய்யாத விஷயங்களை செய்ததாக காட்டிக்கொள்ள விளம்பரத்தில் நடித்து வருகின்றனர்.
நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோரின் பாடல் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை நோட்டீஸ் அனுப்பியதையும், பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கைது செய்யப்பட்டதையும் நினைவு கூறுகிறேன்.
அதிநவீன பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறந்து நடத்துவதை விட அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்களை சிறையில் அடைப்பது பாஜகவிற்கு எளிது.
கல்வி அரசியல் என்பது எளிதான பணி அல்ல. அது அரசியல் வெற்றிக்கான செயலும் அல்ல.
குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்விக்காக ஊக்குவிப்பது என்பது ஒரு நீண்ட பணியாகும். ஆனால் சிறை அரசியலில் சிறந்து விளங்க 4 சிபிஐ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் போதும். பாஜக செய்வது சிறை அரசியல் தான்.
பாஜக ஆட்சியில் சிறை அரசியல் வெற்றி பெறலாம். ஆனால் எதிர்காலம் கல்வி அரசியலுக்கு சொந்தமானது.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் தேர்தல்… ‘பிஜேபி’ வார்த்தையைக் கூட உச்சரிக்காத எடப்பாடி
ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநரால் இந்த தடவை முடியாது! – அமைச்சர் ரகுபதி