political leaders wishes for new year 2024

பிறக்கும் ஆங்கில புத்தாண்டு : வாழ்த்தும் அரசியல் தலைவர்கள்!

அரசியல்

உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

2024-ஐ வரவேற்கிறேன்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2023ஆம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை வீடியோவாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருக!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், “
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவால் போற்றி வளர்க்கப்பட்ட ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’, மக்களுக்கு துயரம் ஏற்படும் நேரங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி செய்து வருவதையும்; கழக ஆட்சிக் காலங்கள் ‘தமிழக மக்களுக்கான பொற்காலங்கள்’ என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.

உயர்வான வாழ்க்கை அமையட்டும்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், “மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழை, வெள்ளம், புயல் என பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் தமிழக மக்கள் அனைவரின் பொருளாதாரத்தை மீட்கும் ஆண்டாகவும், பொய்த்துப் போன பருவமழை, வரலாறு காணாத வறட்சி, இயற்கைப் பேரிடர்கள் என தன் வாழ்க்கை முழுவதும் துயரத்தை மட்டுமே அனுபவித்து வரும் உழவர் பெருமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆண்டாகவும் புத்தாண்டு அமையும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் முடங்கியிருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்படவும் வேலைவாய்ப்புகள் பெருகவும், பொதுமக்களின் நீண்டகால பிரச்னைக்கு நல்ல தீர்வு ஏற்படவும், பெண்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திடவும் புத்தாண்டு பிறக்கும் இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.

மலரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும், நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியைத் தரும் ஆண்டாக அமையட்டும் என வாழ்த்தி தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.

பாரத தேசம் பீடுநடை போடும்!

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது புத்தாண்டு வாழ்த்தாக, ”நம் பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புத்தாண்டு,புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024- புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும்,வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம்.

ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம்.

இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதிய உயரங்கள் அடைவோம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், “பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புது சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு ரஷ்ய அதிபர் வாழ்த்து!

அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் புதின், புத்தாண்டையொட்டி இந்திய பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர்.

அவர் அனுப்பிய செய்தியில், “உலகில் கடினமான சூழ்நிலை இருந்த போதிலும் ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். பன்முக இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும், பிராந்திய மற்றும் உலகளவில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர வேண்டும்” என்று புதின் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்: ’தளபதி 68’ பர்ஸ்ட் லுக் வெளியாகிறது!

சுற்றுலா வேன் மீது மோதிய லாரி: ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *