முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
சென்னையில் 11,12,14 ஆம் மண்டலங்களில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெறும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 21) ஆய்வு செய்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரம்!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுக வழக்கு!
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழு கூட்டம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
நாம் தமிழர் கட்சி கூட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது
108 அடி ஆதிசங்கர் சிலை!
நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர ஆதிசங்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 488வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
கால்பந்து போட்டி!
ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் வங்காளதேச அணியுடன் இன்று இந்திய அணி மோதுகிறது.