என் அண்ணனிடம் கற்றுக்கொள்ளுங்கள்: பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்!

அரசியல்

என் அண்ணனை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று (ஏப்ரல் 29) பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தன்னை விஷப்பாம்பு என்று திட்டியதாக குறிப்பிட்டார்.

இதுவரை காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் 91 முறை பல்வேறு வகையில் தன்மீது அவதூறுகளை வீசியுள்ளனர் என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) கர்நாடகாவின் பாகல்கோட் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

பிரதமரின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய பிரியங்கா காந்தி,

“இதுவரை நான் இந்த நாட்டின் பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன். இந்திரா காந்தி இந்த நாட்டிற்காக தனது உடம்பில் தோட்டாக்களை தாங்கிக் கொண்டார்.

ராஜீவ் காந்தி தனது உயிரை தியாகம் செய்திருக்கிறார். பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் இந்த நாட்டிற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் தற்போதைய பிரதமர் என்னை அவதூறாக பேசுகிறார்கள் என்று அழுகிறார்.

மக்கள் முன்வந்து தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கதறும் ஒரு பிரதமரை முதல் முறையாக நான் பார்க்கிறேன.

மக்களின் குறைகளை கேட்பதற்கு பதிலாக அவர் தனது துயரங்களை கூறிக் கொண்டிருக்கிறார்.

learn from my brother priyanka gandhi

பிரதமர் மோடியின் அலுவலகத்தில் யாரோ ஒரு பட்டியலை தயாரித்திருக்கின்றனர். அதில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அந்தப் பட்டியலில் பிரதமரை எத்தனை முறை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்றுதான் உள்ளது.

அந்தப் பட்டியல் குறைந்தபட்சம் ஒரு பக்கத்திற்குள் அடங்கிவிடும். ஆனால் மோடி என் குடும்பத்திற்கு செய்த துஷ்பிரேயங்களை பட்டியலிடத் தொடங்கினால் பல புத்தகங்களை வெளியிட வேண்டி இருக்கும்.

மோடி ஜி தைரியமாக இருங்கள். என் சகோதரர் ராகுல் காந்தியிடம் அந்த தைரியத்தை கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நாட்டிற்காக அவதூறுகளை மட்டுமல்ல, துப்பாக்கி குண்டுகளையும் தாங்கிக் கொள்ள என் சகோதரர் தயாராகவே இருக்கிறார். துப்பாக்கியால் சுட வந்தாலும் கத்தியால் குத்த வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்பேன் என்று அவர் சொல்கிறார்..

மோடி ஜி இது பொது வாழ்க்கை. இது போன்ற விஷயங்களை தாங்கிக்கொள்ளும் தைரியத்துடன் முன்னேற வேண்டும். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் இன்னும் ஒன்றை கற்றுக் கொண்டால் அது நன்றாக இருக்கும். மக்களின் குரல்களுக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் பிரியங்கா காந்தி.

பிரியா

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்?

சிஎஸ்கேவை தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *