தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.சென்டரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்ந நிகழ்வில் 234 தொகுதிகளை சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஜய்,”என் நெஞ்சில் குடியிருக்கும்…” என்று தன்னுடைய உரையை தொடங்கியவர்.. ”நான் நிறைய இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறேன். ஆனால் இது போன்ற விழாவில் பேசுவது இது தான் முதல்முறை. என் மனதில் இப்போது ஒரு பொறுப்புணர்வு வந்தது போல் உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன்.
உன்னில் என்னை காண்கிறேன் என்பதை போல் நான் உங்களில் என்னை காண்கிறேன். என்னுடைய பள்ளி நாட்கள் இப்போது என் நினைவில் வந்து செல்கிறது.
நான் உங்களை போன்ற சிறந்த மாணவன் கிடையாது. ஒரு சராசரி மாணவன் தான்.
நான் நடிகன் ஆகவில்லை என்றால் மருத்துவர் ஆகியிருப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். என்னுடைய கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான். அதை நோக்கி தான் நான் சென்று கொண்டிருந்தேன்”என்ற விஜய், “ஒருவேளை…” என்று சொல்லிவிட்டு சற்று நேரம் தனது உரையை நிறுத்தினார்.
அப்போது ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் அரசியல் குறித்து எதுவும் பேசுவார் என்று காத்திருக்க…
பின்னர் தனது உரையை தொடங்கிய விஜய், “சரி அத விடுங்க அது எல்லாம் இப்போ எதுக்கு…அது வேணாம்…”என்றார்.
”இது போன்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. சமீபத்தில் ஒரு படத்தில் அழகான வசனம் ஒன்று நான் கேட்டேன். காடு இருந்தா எடுத்துக்குவானுங்க..ரூவா இருந்தா புடுங்கிகுவானுங்க..ஆனா படிப்ப மட்டும் உன் கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்ற வரி என்னை மிகவும் பாதித்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டும் அல்ல இது தான் எதார்த்தம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று எனது மனதில் நினைத்துக்கொண்டு இருந்தேன் அதற்கான நேரம் தான் இது.
இதற்காக உழைத்த தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு , மக்கள் இயக்க நண்பர்களுக்கும் , பொதுச்செயலாளர் ஆனந்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு பிடித்த சிலவற்றை உங்களிடம் ஒரு நட்பைபோல் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”என்றார் விஜய்.
அப்போது ஐன்ஸ்டீன் சொன்ன தத்துவம் ஒன்றை நினைவு கூர்ந்தார், “பள்ளிக்கு சென்று படித்தவை எல்லாம் மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அது தான் கல்வி என்றார் ஐன்ஸ்டீன். முதலில் அவர் சொன்னது புரியவில்லை. பிறகு தான் புரிந்தது.
நாம் படிக்கும் போது வேதியியல், இயற்பியல்,கணிதம் , வணிகவியல் எல்லா வற்றையும் நீக்கி விட்டு எது மிச்சம் இருக்கும் என்று பார்த்தால் உங்களுடைய குணம் மற்றும் சிந்திக்கும் திறன் இவைதான்”என்றார் விஜய்.
தொடர்து பேசிய விஜய், “When wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, all is lost” என்று American evangelist பில்லி கிரஹாம் சொன்ன பிரபலமான வாசகத்தை சொல்லி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய விஜய், “வாட்சாப், இன்ஸ்டாகிராம்,பேஸ்புக், சேர்சேட் ஆகியவற்றில் வரும் தகவல்களில் முக்கால் வாசி தகவல்கள் பொய்யாகத்தான் இருக்கிறது. சோசியல் மீடியாவில் வரும் செய்திகளில் எது உண்மை , எது பொய் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்றால் உங்கள் பாடப்புத்தகத்தை தாண்டி படிக்க வேண்டும். சமீப காலமாக நான் வாசிக்க தொடங்கியுள்ளேன்.
நீங்களும் உங்களால் முடிந்த வரை படியுங்கள். எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர் , பெரியார், காமராஜர் ஆகியோரை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
முன்பெல்லாம், உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்பார்கள் ஆனால் இப்போது எந்த சோசியல் மீடியா பக்கத்தை பின் தொடர்கிறாய் என்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது போல் ஆகிவிட்டது.” என்றவர் மாணவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கத் தொடங்கினார்.
“நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்திக்கொள்வது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் பணம் வாங்கி கொண்டு வாக்கு செலுத்துவது”என்று பேசிய விஜய் எடுத்துகாட்டு ஒன்று சொன்னார், “ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு தொகுதில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்றால் 15 கோடி ரூபாய். 15 கோடி ரூபாய் வரை ஒருவர் செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன்பு அவர் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்பதை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
இதையெல்லம் மாணவர்களின் கல்வியமைப்பில் கொண்டு வர வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவர்கள் பெற்றோர்களிடம் சென்று காசு வாங்கி கொண்டு இனிமேல் ஓட்டு போடாதிங்கனு சொல்லி பாருங்க. நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் தான் வரும் ஆண்டுகளில் முதல் முறை ஓட்டு போடும் வாக்காளர்களாக வர போகிறீர்கள். இதை நான் சொல்வதற்கான காரணம் என்னவென்றால்.. இது எப்போது நடக்கிறதோ அப்போது தான் கல்வி முறையே முழுமையடைந்ததாக இருக்கும்”என்றார்.
மேலும், “உங்களுடைய ஊர்களில், உங்கள் தெருக்களில் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். தோல்வி அடைந்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தைரியத்தால் அவர்கள் வெற்றி அடைந்தால் அது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு.
வெற்றியடைந்த எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். தோல்வியடைந்தவர்கள் சீக்கிரமாகவே வெற்றி அடையவும் வாழ்த்துகள். மாணவர்கள் எந்த சூழலிலும் தவறான எந்த முடிவும் எடுத்துவிடாமல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல வாழ்த்துகிறேன். வளர்ப்போம் கல்வி, வளர்க என்னுடைய குட்டி நண்பா மற்றும் நண்பிகள் “என்று கூறினார். பின்னர், மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி: மதிய சாப்பாடு என்ன தெரியுமா?
விஜய்க்கு அன்புமணியின் அன்பான வேண்டுகோள்!