பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 10-ந் தேதியன்று நடைபெற்றது. 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும்,
காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) சார்பில் 207 வேட்பாளர்களும்,
ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் சார்பில் 133 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதில் 184 பெண்களும், ஒரு திருநங்கையும் அடக்கம்.
2 மணிக்கு தெரிந்துவிடும்!
தேர்தலைத் தொடர்ந்து, பயன்படுத்தப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் , 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்ககளும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 4 இடங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதால், மதியம் 2 மணிக்குள் ஆட்சி அமைக்க போவது யார் என்பதற்கான பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் பரபரப்பு
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் முன்னோட்டமாகவே கர்நாடக சட்டசபை தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியிலிருக்க கூடிய ஒரே மாநிலம் கர்நாடகா.
இதனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவில் இருபெரும் கட்சிகளான காங்கிரஸ் – பாஜக இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதே வேளையில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு சாதகமாகவே வந்தன.
எனினும் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
காலை இளையராஜா; இரவில் ஏ.ஆர். ரகுமான்: கவிஞர் யுகபாரதியின் சிலிர்ப்பு அனுபவம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!