செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பு எப்போது?

Published On:

| By Selvam

senthil balaji bail judgement

senthil balaji bail judgement

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஜனவரி 12-ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்த வழக்கில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.

அதன்படி மூன்றாவது முறையாகச் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி, “செந்தில் பாலாஜியின் வருமானம் தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் டெபாசிட்டான பணம் தொடர்பான விவரங்களை திரித்து அதிகளவில் பணம் டெபாசிட் ஆனதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். செந்தில் பாலாஜி 200 நாட்களுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் உள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், தண்டனை வழங்கப்பட்டதை போல சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில், “செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 12-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெளி ஆட்களை வைத்து பேருந்தை இயக்குவது சட்டவிரோதம்: செளந்தரராஜன் காட்டம்!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு!

senthil balaji bail judgement

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share