Is there a gap between DMK and vck

திரும்பத் திரும்ப கேட்போம்… தொகுதி பங்கீடு பற்றி திருமா பேட்டி!

அரசியல்

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்லாதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடுக்காக திமுக – விசிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்று மதியம் 12 மணிக்கு அறிவாலயத்துக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயம் செல்லவில்லை. அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று 12 மணியளவில் திமுக தேர்தல் குழுவினரோடு தொகுதி பங்கீடு குறித்து பேச இசைவு அளித்திருந்தேன். ஆனால் உயர்நிலை குழு கூட்டம் முடிய தாமதம் ஆனதால், திமுக குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர் மூத்த அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன். உயர்நிலை கூட்டத்தை உடனடியாக முடிக்க முடியாத நிலை உள்ளது. இன்று வர முடியாததற்கு வருந்துகிறோம் என்று சொன்னேன்.

மீண்டும் உரிய நேரத்தை ஒதுக்கீடு செய்து பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். முதல்வரை சந்திப்பதற்கான தேவை இருந்தால் சந்திப்போம்.

உயர்நிலை குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக மட்டுமல்ல, தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தல் ஆணையத்திற்கு நாம் சொல்ல வேண்டிய செய்திகள் என்ன?, கூட்டணி வெற்றி பெறுவதற்கு நாம் கையாள வேண்டிய உத்திகள் என்ன? என்று விரிவாக விவாதித்தோம்.

முதலில் 4 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை விடுத்தோம். இதில் 2 தனி தொகுதி, ஒரு பொது தொகுதி என 3 தொகுதியாவது கேட்டு பெறுவது நலம் பயக்கும் என இன்றைய கூட்டத்தில் சிலர் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

ஏற்கனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தான் இப்போதும் உள்ளன. புரிதலோடு இயங்குகிற கட்சிகள் தான் உள்ளன. ஆகவே எந்த குழப்பமும், அவசரமும் கிடையாது.

வாய்ப்பிருந்தால் இன்று வந்து பேசி ஒப்பந்தம் போடலாமே என்ற ஒரு கருத்து சொல்லப்பட்டது. அதற்கு நாங்களும் இசைவளித்தோம்.

ஆனால் 9 மணிக்கு தொடங்க வேண்டிய உயர்நிலை குழு, 11 மணிக்குதான் தொடங்கியது. அதனால் 12 மணிக்கு செல்லமுடியவில்லை என்பதால் திமுக குழுவை தொடர்பு கொண்டு பேசினோம். இன்றைக்கு எங்களால் வரமுடியாது பொருத்தருள்க என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர்களும் இசைவு தெரிவித்தார்கள்.

வெளியில் எதாவது பேசுவார்கள் என்பதற்காக நாங்கள் அவசரப்படமுடியாது. நாங்கள் அவசரப்படக்கூடிய எந்த தேவையும் இல்லை.

நாங்கள் அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். அந்த கூட்டணியில் தான் இருப்போம். அதில் தான் பயணிப்போம். இந்த தேர்தலை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில்தான் சந்திப்போம்.

கூடுதல் இடங்களை கொடுங்கள் என்று கேட்பதற்கான உரிமையும் தேவையும் எங்களுக்கு இருக்கிறது. அதனால் கேட்கிறோம்.

இன்றைக்கு போக முடியாமல் போனதற்கு எந்த யூகங்களுக்கும் இடமில்லை. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

திமுக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் என்பதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது.
கடைசி வரை 4 தொகுதிகள் கேட்போம், 3 தொகுதிகள் கேட்போம். திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்போம்” என்று கூறினார்.

காங்கிரஸின் காயத்துக்கு எங்களிடம் மருந்து இருக்கிறது என்று அதிமுக கூறியிருக்கிறது. உங்களிடம் மறைமுகமாக அதிமுக பேசியிருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் தான் இந்தியா கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியை முன்னின்று ஒருங்கிணைத்ததில் முதல்வருக்கு பெரும் பங்கு உண்டு, எனவே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே இடைவெளி உருவாகும். அதற்குள் நுழையலாம் என யாரும் கனவு காண வேண்டாம். அதற்கான வாய்ப்பு உருவாகாது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்படாது. அதனால் யாரும் இலவுகாத்த கிளி போல காத்திருக்க வேண்டாம்” என்றார்.

சின்னம் தொடர்பாக பேசிய அவர், “2016 முதல் நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். அதனால் தனி சின்னம் என்பதில் பிரச்சினை இல்லை” என பதிலளித்தார்.

விசிகவின் உழைப்பு மற்றும் பங்கை திமுக தலைவர் நன்கு அறிவார் என்று தெரிவித்த திருமாவளவன், அதிமுக, பாஜக கூட்டணி அமைதியாக இருப்பதால் திமுக கூட்டணியில் நடக்கும் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குகிறீர்கள். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எங்கள் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தருமபுரம் ஆதீனம் வழக்கு: அதிமுக நிர்வாகி தலைமறைவு!

நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து; கூடுதல் பேருந்து, மெட்ரோ ரயில் விவரங்கள் உள்ளே!

+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *