வருகிற மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு தொகுதிப் பங்கீடு செய்வதற்காக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்த திமுக, இன்று மார்ச் 2ஆம் தேதி பகல் 12மணிக்கு மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பேசுவதற்கு அழைத்திருந்தது.
ஆனால் இன்று திட்டமிட்டபடி திருமாவளவன் அறிவாலயம் செல்லவில்லை. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி ஆகியவற்றை திமுகவிடம் கேட்டிருந்தது.
இந்த மூன்று தொகுதிகளிலும் தங்களது சொந்த சின்னமான பானை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதிலும் திருமாவளவன் உறுதியாக இருந்தார்.
ஒருவேளை நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே இன்னொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது போல, பானை சின்னமும் வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது என்பதற்காக…
டெல்லி சென்று ஐந்து தென் மாநிலங்களில் பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட இருக்கிறது என்ற கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சந்தித்தார் திருமாவளவன்.
அப்போது திருமாவளவனோடு ஸ்டாலின் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருக்கிற டி. ஆர். பாலு, அமைச்சர் நேரு, ஆ.ராசா உள்ளிட்டவர்களும் திருமாவளவனிடம் நாளை பேச்சுவார்த்தையில் சந்திப்போம் என்று சொல்லி விடை அளித்தனர்.
ஆனால் இன்று பகல் திட்டமிட்டபடி விடுதலை சிறுத்தைகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அறிவாலயம் செல்லவில்லை.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் தரப்பில் விசாரித்தோம்.
“நாங்கள் இரண்டு தனி தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் மூன்று தொகுதிகளை கேட்கிறோம். இந்த மூன்றிலும் பானை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதையும் உறுதியாக தெரிவித்து விட்டோம்.
ஆனால் திமுக தரப்பில் ஒரு பொதுத் தொகுதி, ஒரு தனி தொகுதி என இரண்டுதான் தருவோம் என்றும் இதில் திருமாவளவன் மட்டும் கடந்த தேர்தலை போல பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும், இன்னொரு சிறுத்தைகளின் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தலைவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.
வட மாவட்டம் மட்டுமல்லாமல் டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக சிறுத்தைகள் கட்சிக் கட்டமைப்பு மேம்பட்டு இருக்கிறது.
திருச்சியில் மிகப்பிரமாண்டமான மாநாட்டையும் நாங்கள் நடத்திக் காட்டினோம். அதில் முதலமைச்சர் ஸ்டாலினும் வந்து கலந்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் விசிகவை 2019 காலகட்டத்தில் வைத்திருந்த நிலையிலேயே திமுக பார்க்கிறது. இதை எங்கள் கட்சி ஒப்புக்கொள்ளவில்லை.
அதனால் அறிவாலயம் செல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு இப்போது உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இதில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.