கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் முகாமிட்டு தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் நடத்திய சோதனையில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 100 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் இல்லத்தில் சோதனை நடத்தியது.
மேலும் கடந்த வாரம் தமிழ்நாடு அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக நேற்று அறிவித்ததை அடுத்து, தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை தீவிரமாகும் என்று கூறப்பட்டது.
40 இடங்களில் சோதனை!
அதன்படி இன்று மீண்டும் அமலாக்கத்துறை களத்தில் இறங்கியது. இந்த முறை ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் அலுவலகங்கள் என தஞ்சாவூர். மதுரை, காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளது.
தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் செய்து வரும் சண்முகம் என்பவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் அவருக்கு சொந்தமான சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
தொடர்ந்து அவரது வீட்டுக்கு கீழ் தளத்தில் சண்முகத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தின் உதவியாளர் ஜோதிகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில் அங்கிருந்து அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பாதுகாப்பு கட்டுபாடுகள் இல்லை?
இதுவரை திமுக தொடர்புடையவர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லத்தில் மட்டுமே அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் முதன்முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் ஆய்வு நடத்தப்படும் நிலையில், ஜோதிக்குமாரின் வீட்டில் அதனை காணமுடியவில்லை. சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, தென் சென்னை பாஜக தலைவர் காளிதாஸ் மற்றும் தமிழக பாஜக தலைமை அலுவலக செயலாளர் சந்திரன் ஆகியோர் ஜோதியின் வீட்டிற்கு எந்தவித கட்டுப்பாடுமின்றி உள்ளே சென்று வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கண் விழிக்குமா விக்ரம் லேண்டர்: செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளா?
விஸ்வரூபம் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது!