இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்… வெற்றி பெற்றது எப்படி?

அரசியல்

இங்கிலாந்தின் அரசமுடியை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் போலவே இங்கிலாந்து பிரதமர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றார் ரிஷி சுனக்.

கடந்த மாதம் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் ட்ரஸ், அங்கு நிலவிய பொருளாதார பிரச்னைகள் காரணமாக கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்காக இன்று நடந்த தேர்தலில் பென்னி மோர்டவுன்ட் விட 142 எம்பிக்களின் ஆதரவைப் பெற்று ரிஷி சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் வரலாற்றில், அந்நாட்டின் பிரதானமான கன்சர்வேடிவ் கட்சி, முதல் முறையாக வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ரிஷியின் வெற்றிக்கு காரணம் என்ன?

கடந்த ஏழு மாதங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக போரிஸ் ஜான்சன் லிஸ் டிரஸ் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இது ரிஷி சுனக் ‘சுட்டிக்காட்டிய’ தவறான பொருளாதாரக்கொள்கைகள் குறித்த பேச்சுகள் சரி தான் என்ற கருத்து மக்களிடையே மீண்டும் எழுந்தது.

how rishi sunak win UK pm race

கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் விலகும்போது, அவர் சொன்ன காரணம் “பிரதமர் ஜான்சனின் பொருளாதார கொள்கைகள், தன்னுடைய பொருளாதார கொள்கைகளுக்கு நேர்மாறாக இருக்கிறது. அவற்றால் நாட்டின் நிலையை சீராக்க முடியாது.” என்று தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து 2 பிரதமர்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்க முடியாமல் பதவி விலகியது, ரிஷியின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை எடுத்துக்காட்டின.

இந்நிலையில் தான் லிஸ் பதவி விலகவும், ரிஷி மீதான நம்பகத்தன்மை மக்களிடம் அதிகரித்து ஆதரவும் பெருகியது. இதுதான் அவர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் தேர்ந்தெடுக்கும் வழிமுறை!

பிரிட்டனை பொறுத்தவரை வெறும் எம்பி என்ற தகுதி மட்டுமே பிரதமராக போதாது. யார் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அவரே பிரிட்டன் பிரதமராகவும் பதவியேற்பார்.

ஆகவே பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்றால் முதலில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

how rishi sunak win UK pm race

கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட 20 எம்பிக்கள் முன்மொழிய வேண்டும். பின் எத்தனை பேர் போட்டியில் உள்ளார்களோ அவர்களிடையே தேர்தல் நடக்கும். எம்பிக்கள் ரகசிய ஓட்டுசீட்டு முறையின் கீழ் போட்டியிடுபவர்களுக்கு வாக்களிப்பார்கள்.

இதில் குறைவான வாக்குகளை பெறுபவர்கள், ஒவ்வொரு சுற்றிலும் வெளியேற்றப்படுவார்கள். அவ்வாறு இருவர் மட்டுமே போட்டியில் மிஞ்சும் வரை எம்பிக்கள் வாக்களிப்பார்கள்.

அதன் பின் இறுதிச்சுற்றுக்கு முந்தைய வாக்கெடுப்பில், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நபருக்கு குறைந்த பட்சம் 100 எம்பிக்கள் ஆதரவு வேண்டும். அப்படி குறைந்த பட்ச ஆதரவு இல்லாத போட்டியாளர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படுவார். ஆதரவு உள்ளவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒரு வேளை போட்டியிடும் இருவருக்கும் 100 எம்பிக்களின் ஆதரவு இருந்தால், இறுதி சுற்றில் எம்.பி.க்கள் அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இந்த இறுதி சுற்று, ஆன்லைன் தேர்தலாக நடைபெறும். இதில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இதில் வெற்றி பெறுபவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார்.

அப்படி பொறுப்பேற்பவரை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரதமராக நியமிப்பார்.

how rishi sunak win UK pm race

கடந்த முறை தோற்றது ஏன்?

கடந்த முறை லிஸ்சை எதிர்த்து ரிஷி போட்டியிட்டபோது 137 எம்பிக்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. லிஸ்சிற்கோ 113 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது.

ஆனால், கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் லிஸ்சிற்கு 57 சதவீத வாக்குகளும் ரிஷிக்கு 43 சதவீத வாக்குகளும் கிடைத்தது. இதனால் லிஸ் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகவும் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு ரிஷி வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளி என்ற பார்வை பெரும்பாலான கட்சி உறுப்பினர்களிடம் காணப்பட்டது.

பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி!

ஆனால் லிஸ்ஸின் ராஜினாமாவிற்கு பிறகு, தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த முறை ரிஷியை எதிர்த்து போட்டியிடும் பென்னி மோர்ட்டான்டை 30 க்கும் குறைவான எம்பிக்களே ஆதரித்துள்ளனர். ரிஷிக்கோ 142 எம்பிக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து பென்னி மோர்ட்டான்ட் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதனால், கடந்த முறை போன்று கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்கும் இறுதி சுற்று வரை செல்லாமல், நேரடியாக எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமராக பொறுப்பேற்கிறார் ரிஷி.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், வெள்ளையர் அல்லாத ஒருவர் இங்கிலாந்து மக்களின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அந்நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமாகும்.

how rishi sunak win UK pm race

ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் வெள்ளையர் அல்லாத நபர் மற்றும் இந்திய வம்சாவளி என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

ஏனென்னில், கன்சர்வேடிவ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட 1834 ஆண்டு முதல் தற்போது வரை, கிட்டத்தட்ட 183 ஆண்டுகால வரலாற்றில் வெள்ளையர் அல்லாத ஒருவர் அக்கட்சியின் தலைவராக இருந்தது இல்லை. அந்த வரலாற்றைதான் தற்போது ரிஷி சுனக் மாற்றி காட்டியுள்ளார்.

‘இன்போசிஸ்’ தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷிதா மூர்த்தியின் கணவர் தான் ரிஷி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவருக்கு இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நிதியமைச்சராக இருந்தபோது தனது பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தமுடியாமல் ரிஷி சுனக் தவித்தார். தற்போது அவர் பிரதமாரக பதவியேற்க உள்ள நிலையில், இங்கிலாந்தின் பொருளாதார சூழ்நிலையை மாற்றி மக்களிடம் பெற்றுள்ள நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வினோத் அருளப்பன்

மல்லுக்கட்டிய என்.ஐ.ஏ அதிகாரிகள்… விட்டுக்கொடுக்காத சைலேந்திர பாபு!

T20WorldCup 2022: 2 ஓவரில் 40 ரன்கள்… தெறிக்கவிட்ட டி காக்.. ஆனால் அத்தனையும் வீண்!

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *