ஆளுநர் ரவி என்ன செய்கிறார் என்று அவருக்கு தெரிகிறதா? தலைமை நீதிபதியின் அடுத்த கண்டனம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அரசியல்

பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காத விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் இன்று  (மார்ச் 21)   கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாளைக்குள் முடிவெடுக்குமாறு கெடு விதித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில்  உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பொன்முடி 2024, ஜனவரி 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மார்ச் 11 ஆம் தேதி நிறுத்தி வைத்தது.

இதனால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார். அவரை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கிறது. அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் அப்பட்டமாக மீறுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். ஆளுநர் சார்பில் இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஆஜரானார்.

அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணியிடம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று அவருக்கு தெரிகிறதா?. குற்றவாளி என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திருக்கிறது. எனினும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார். தயவு செய்து, ஆளுநரிடம் சொல்லுங்கள் இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் ஆளுநரின் நடத்தை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இதை  இங்கு உரக்கச் சொல்ல முடியும். ஆனால் அது தீர்வு கிடையாது. ஆளுநர் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகிறார்.

தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ஆளுநர் எப்படி கூற முடியும்?. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தண்டைனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அப்படியிருக்கும் போது பதவிப் பிரமாணம் செய்து வைக்கமாட்டேன் என்று கூற ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை.

அவருக்கு சட்ட அறிவுரைகள் வழங்கியவர்கள் சரியாக வழங்கவில்லை போல. தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு, சட்டநடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும் என்று ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

தலைமை நீதிபதியின்  கடுமையான கண்டனத்தை தொடர்ந்து,  “இந்த வழக்கை நாளை வரை ஒத்திவைக்க வேண்டும். ஆளுநரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன். ஆளுநரின் செயல்பாட்டை நியாயப்படுத்தவில்லை” என இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி கூறினார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “75 ஆண்டுகால இந்திய வரலாற்றில் இல்லாத வகையில், அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் மறுத்துள்ளார்.

ஆளுநர் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது, குடியரசுத் தலைவருக்கு மொத்தமாக அனுப்புவது ஆகிய விவகாரத்தில் அவரை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

ஆளுநருக்கு முதல்வர் மார்ச் 13ஆம் தேதி கடிதம் அனுப்புகிறார். ஆனால் ஆளுநர் மார்ச் 17ஆம் தேதிதான் பதிலளிக்கிறார். கால தாமதம் செய்கிறார்” என்றார்.

தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, “ பொன்முடி மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளதால், அவரது பழைய நிலையே தொடரும் என்ற பட்சத்தில் புதிதாக பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டுமா?” என்றும் கேட்டது.

இதற்கு, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  வில்சனும், பழைய நிலை திரும்பியதால், புதிய உறுதிமொழி தேவைப்படாது என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து,  “ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் சொன்னால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.   ஆளுநர் என்பவர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே. ஆளுநர்  அரசியல் சாசனத்தை பின்பற்றவில்லை எனில், மாநில அரசு என்ன செய்யும்?  இன்று ஒருநாள்தான் கெடு, உச்ச நீதிமன்றத்தோடு விளையாடாதீர்கள். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கமாட்டோம். கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தென் சென்னை தமிழிசை, கோவை அண்ணாமலை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

IPL 2024: பத்து கேப்டன்களுமே ‘இந்த’ விஷயத்துல ஒற்றுமையா இருக்காங்க!

 

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *