கடலூரில் பாமக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட பாமக நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதற்கு வடலூர் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பாக சட்ட ஆலோசனை செய்த பாமக நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
பாமக கட்சித் தொடங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 29) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பாமக தரப்பில், “பாமக பொதுக்கூட்டங்கள் அமைதியான முறையில் தான் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதில்லை.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி எங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்.எல்.சி விவகாரம் மட்டுமின்றி மக்கள் பிரச்சினைகள் பற்றியும் பேசுவோம்.
வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை என்றால் குள்ளஞ்சாவடியில் அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசுத் தரப்பில், “என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம் நடத்திய அதே இடத்தில் தான் தற்போது பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்கிறது. வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தால் மீண்டும் எல்.எல்.சி பற்றி பேச வாய்ப்புள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். கடலூருக்கு வெளியே பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க தயார்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது. மாலை 6-8 வரை மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். நெய்வேலி போராட்டம் பற்றி பேசக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்று கட்சியினரை வழிநடத்தக் கூடிய பொறுப்பு தலைமைக்கு உண்டு” என அறிவுரை வழங்கினார்.
அதுபோன்று கடலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கோரிய வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் கே.பாலு, “வேறு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த விருப்பமில்லை. வேறு மாவட்ட காவல்துறையை அனுக மாட்டோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என்று கூறியுள்ளார்.
பிரியா
விக்கிரவாண்டி டோல்கேட்: உயரும் சுங்ககட்டணம்!
ஓணம் சேலையில் கலக்கும் நடிகைகள்!
வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைகிறது!
விலைமதிப்பற்ற ராக்கி: தம்பிக்காக கல்லீரல் தானம் செய்த அக்கா