துபாயில் பெய்த வரலாறு காணாத மழைக்கு மேக விதைப்பு காரணம் என கூறப்படும் நிலையில், இதனை ஐக்கிய அரபு அமீரகம் அரசு மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் பெய்த பெருமழை காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், பைக்குகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அதேபோன்று தற்போது துபாயில் பெய்த பெருமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது..
உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன.
வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டாலும்கூட மற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சார்ஜா, துபாய் டெய்ரா, பர் துபாய், சத்வா, ஜுமெய்ரா, துபாய்- அபுதாபி சாலையிலுள்ள சேக் செய்யது ரோடு, அல்கூஸ் தொழிற்பேட்டை பகுதி என பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.
பைக், கார், லாரி என இலகுரக வாகனங்கள் முதல் பெரிய பெரிய வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாலைவன பூமியான துபாயில் கோடைக் காற்றின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும். அங்கு சராசரி மழை அளவே 95மிமீ தான். அதாவது 3 இன்ச் மழை பெய்யும்.
ஆனால் துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பெய்துள்ளது.
இது மிகவும் அரிதான மழைப்பொழிவு என்று வானிலை ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
அதேசமயம் இது கிளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழை என்றும் சொல்லப்படுகிறது.
மேக விதைப்பு அடிப்படையில் செயற்கை மழையை பொழிய வைக்கமுடியும். மேக விதைப்பு என்றால் விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன் மூலம் மழை பெய்ய செய்யலாம். இதன்மூலம் மேகங்களில் இருக்கும் நீராவி நீராக மாறும்.
ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இந்த நடைமுறையை பயன்படுத்தி வருகிறது.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட விமான கண்காணிப்பு தரவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேக விதைப்பு முயற்சிகளுடன் இணைந்த ஒரு விமானம் திங்களன்று யுஏஇ முழுவதும் பறந்ததைக் காட்டுகிறது.
அப்படி கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைப்பு கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை நடந்ததாகவும் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய் கிழமை அன்று மேக விதைப்பு நடத்தவில்லை என்று யுஏஇ அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் மழை பெய்ததா?
மேக விதைப்புதான் மழைக்கு காரணம் என்ற ஊகங்களை வானிலை நிபுணர்கள் மறுக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகவும் மழை பெய்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“வளிமண்டலத்தில் குறைந்த அழுத்த அமைப்பு, மேலடுக்கில் குறைந்த அழுத்த அமைப்புடன் இணைந்து அழுத்தம் ஏற்பட்டது” என ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மைய மூத்த ஆய்வாளரான எஸ்ரா அல்னாக்பி கூறுகிறார்.
“தரைமட்டத்தில் நிலவும் அதீத வெப்பநிலை மற்றும் மேலடுக்கில் நிலவும் குளிர்ச்சியான வேறுபாட்டால் அந்த அழுத்தம் தீவிரமடைந்தது. அதுதான் இடியுடன் கூடிய தீவிர மழைக்கு காரணமாகியது” என்கிறார் அவர்.
“மேலும் ஏப்ரல் மாதத்தில் இது ஒன்றும் எதிர்பாராத நிகழ்வு அல்ல, ஏனெனில் பருவநிலை மாறும்போது இதுபோன்ற அழுத்தம் நடக்கக்கூடியதே. அதுமட்டுமின்றி காலநிலை மாற்றமும் இதுபோன்ற புயலுக்கு காரணமாகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு, தீவிர மழை உட்பட உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கைகள் கூறுவதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
புவி வெப்பமடைதல் அதிகமாகும் போது, இதுபோன்ற பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“துபாய் மழைக்கும் மேக விதைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேக விதைப்பு செய்யப்படுவதற்கு முன்பே தீவிர மழை பெய்யும் என்பதை பல்வேறு சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்திருந்தன” என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
துபாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி எண்கள்
துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
971501205172, 971569950590, 971507347676, 971585754213 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று துபாய் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ்!
இந்தியாவில் முதன்முறை : தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் கார்கள்!