மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ்!
உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி இன்று (ஏப்ரல் 18) டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில வாரங்களாக தனது சின்னமான பலாப்பழத்துடன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று குடியாத்தம் பகுதியில் அவர் வாக்கு சேகரித்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே தனக்கு யாரோ பழச்சாறு மற்றும் மோரில் விஷம் கலந்து கொடுத்தனர் என்றும், அவற்றை குடித்த சில நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும்,
தற்போது விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மன்சூர் அலிகான் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரது உடல்நிலை இன்று சீராகி வந்ததை அடுத்து, மாலையில் பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவின்போது வேலூர் செல்வதற்காக மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி மன்சூர் அலிகான் இன்று மாலையில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியாவில் முதன்முறை : தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் கார்கள்!
18 வருடங்களுக்கு பிறகு… ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா… இயக்குனர் யார் தெரியுமா…?!