உக்ரைன் நேட்டோவுடன் இணைவதில் சிக்கல்: ஜோ பைடன்

அரசியல் இந்தியா

உக்ரைன் நேட்டோவுடன் இணைய இன்னும் தயாராகவில்லை. அதில் சிக்கல் உள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரைத் தொடங்கியது.

தற்போது இந்தப் போர் 500 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்களும், ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும், உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைன் சில வாரங்களிலேயே சரணடையும் என ரஷ்யா எதிர்பார்த்த நிலையில்,  உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதால் இன்றுவரை தாக்குப் பிடித்து நிற்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உக்ரைன் நேட்டோவுடன் இணைய இன்னும் தயாராகவில்லை. அதில் சிக்கல் உள்ளது.

போர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உக்ரைனை நேட்டோ அமைப்புக்குள் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பதில் நேட்டோ குழுவில் ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.

முதலில் உக்ரைன் ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதன்பிறகு தான் இதுகுறித்து பரிசீலிக்க முடியும்.

அதனால், உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பதற்கான ஒரு திட்ட வடிவை, குறிப்பாக அதற்கு அது தகுதி பெறுவதற்கான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நேட்டோவின் நட்பு நாடுகள், அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது படைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கும்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதைப் போலவே, உக்ரைனுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களை வழங்கும். இது தொடர்பாக உக்ரேனிய அதிபரிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நேட்டோ உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நிலவரம் குறித்து இவ்வாறு கூறியிருப்பது சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ராஜ்

கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி:  பிடுங்கியெறிந்ததால் பரபரப்பு!

சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்குக் கூடுதல் விமானங்கள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : கோதுமைப் புட்டு!

 

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *