இந்தியாவில் முதன்முதலாக ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களின் உற்பத்தி ஆலை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் அமைய உள்ளது.
உலகின் தலைசிறந்த சொகுசு கார்களாக ஜாகுவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட கார்கள் பார்க்கப்படுகிறது. இதுவரை பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் மட்டுமே இதற்கான கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர் கார்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவையே.
இந்த நிலையில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் ரூ. 9,000 கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களின் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் முதல்முறையாக ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் தயாரிக்கப்படும் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராணிப்பேட்டையில் புதிதாக அமையவுள்ள இந்த டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சொகுசு கார்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும், ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் போல ராணிப்பேட்டையைச் சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டால் நேரடி மற்றும் மறைமுகமாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக தற்போது இந்தியா உள்ளது. நாட்டில் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு அடுத்தபடியாக சந்தை மதிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது டாடா குழுமம்.
தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸின் முதலீடு, தமிழ்நாட்டில் மற்றொரு குறிப்பிடத்தக்க வாகன முதலீட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மக்களவை தேர்தல் : 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
18 வருடங்களுக்கு பிறகு… ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா… இயக்குனர் யார் தெரியுமா…?!
ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!