dஆரம்பமே ‘ஆறு’: அசத்திய ஆஃப்கானிஸ்தான்!

entertainment

2020ஆம் ஆண்டிற்கான U-19 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி, தென்னாப்பிரிக்காவில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டி குரூப் ‘டி’-யில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க U19 – ஆஃப்கானிஸ்தான் U19 இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா U19 அணி முதலில் பேட் செய்தது. போட்டி துவங்கிய மூன்றாவது பந்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றும் வேட்டையில் இறங்கிய ஆஃப்கானிஸ்தான் U19 அணி, முதல் ஓவரிலிருந்தே ஆதிக்கம் செலுத்த துவங்கியது. தென்னாபிரிக்க வீரர்கள் பந்தை அடிக்க முயன்றபோதெல்லாம், ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் கப்ஹாரி ஏற்படுத்திய சுழற்சியின் காரணமாக, பந்து ஸ்டம்புகளை பதம்பார்த்தது.

50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில், 30ஆவது ஓவரிலேயே ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாபிரிக்க அணி 129 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பார்சன்ஸ் 40 ரன்களை சேர்த்தார். கடைசி விக்கெட் வரை அதிரடியாக விளையாடிய ஜெரால்டு கோட்சே 7 பவுண்டரிகளுடன், 38 ரன்களை 23 பந்துகளில் எடுத்திருந்தார்.

ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சில், ஷபிகுல்லா கப்ஹாரி 15 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார், இவர் வீசிய 9.1 ஓவர்களில் 2 மெய்டன் ஓவரும் அடங்கும். நூர் அஹமத் மற்றும் ஃப்ஸால் ஹக் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 50 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கியது ஆஃப்கானிஸ்தான் அணி.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணியின் கேப்டன் ஸாக்கில் 11 ரன்களுக்கே வெளியேற, இரண்டாவது விக்கெட்டுக்கு இப்ராஹிம் மற்றும் இம்ரான் இணைந்து 80 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதத்தைக் கடந்தனர். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்திய ஆஃப்கானிஸ்தான் U-19 அணி, 25ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை க்ளாயிடு(2) மற்றும் வான் ஊரன்(1) மட்டுமே விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

அசத்தலாக பந்துவீசிய கப்ஹாரி ஆட்டநாயகன் விருதை பெற்றார். U-19 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணி பெற்ற பிரம்மாண்ட வெற்றி மற்ற அணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *