Hஇந்திக்குச் செல்லும் கைதி!

entertainment

தரமான திரைப்படங்கள் எடுப்பதில் இந்திய சினிமாவில் பங்காற்றும் பல்வேறு மொழி திரைப்படங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது. இது பார்வையாளர்களின் ரசனை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதின் அடையாளம். அதனடிப்படையில், எந்தத் திரையுலகத்தில் வெளியாகும் படம் நன்றாக இருந்தாலும், உடனடியாக அதைப் பார்த்துவிடுவது ரசிகர்களின் வழக்கமாக மாறிவிட்டது. இந்தித் திரைப்படங்களாக இருந்தால், ஆங்கில சப்டைட்டிலுடன் பார்த்துவிடுகிறார்கள் தென்னிந்திய மாநிலத்தவர். ஆனால், இங்குள்ள திரைப்படங்களுக்கு சப்டைட்டில் உருவாக்கப்படுவதில்லை என்பதால் அதன் ரீமேக் முக்கியமாகிறது. அதனடிப்படையிலேயே கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். திரையிட்ட இடமெல்லாம் அசாத்திய வெற்றியைச் சாத்தியமாக்கிய கைதி படத்தை யாரோ ஒருவருக்குக் கொடுத்துவிட முடியுமா? தமிழில் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படி தமிழ்த் திரைப்படங்கள் இந்திக்குச் செல்வது புதிதல்ல என்றாலும், தமிழ்த் தயாரிப்பாளரும் இணைந்து அந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பது புதிது தான். இது ஒரு புத்திசாலித்தனமான முயற்சி எனலாம். குறிப்பிட்ட தொகைக்கு மொத்த உரிமையையும் கொடுத்துவிட்டால், அந்தத் திரைப்படம் இந்தியில் எத்தனை ஆயிரம் கோடி வசூலித்தாலும் தமிழில் தயாரித்தவர்களுக்கு உரிமையை விற்ற பணம் மட்டும்தான். ஆனால், ரீமேக் உரிமைக்குப் பேசப்படும் விலையையே இந்தி ரீமேக்கின் தயாரிப்பில் முதலீடு செய்து பார்ட்னர்ஷிப் வாங்கிவிட்டால், மொத்த வசூலில் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இதைப் பல தயாரிப்பாளர்கள் செய்யாததற்குக் காரணம், தமிழ் சினிமாவுக்கும், இந்தி சினிமாவுக்கும் இடையே இருக்கும் தூரம் தான் அல்லது மொழியில் இருக்கும் இடைவெளியாகவும் சொல்லலாம். தமிழ் நாட்டில் வெற்றி பெற்ற படம் இந்தியில் எப்படிப்போகும் என தெரியாததால் ரிஸ்க் எடுக்காமல் கிடைக்கும் பணத்துக்குத் தள்ளிவிட்டுவிடுவார்கள். ஆனால், தன் படைப்பின் மீது நம்பிக்கை கொண்ட எஸ்.ஆர்.பிரபு போன்ற ஒருவர் எப்படி விட்டுக்கொடுப்பார்?

தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த கைதி திரைப்படத்தை, இந்தியில் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்துடன் சேர்ந்து ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்தைப் பற்றிக் கூறிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு, “கைதி திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை, பாடல் இல்லை. அப்படியெல்லாம் இருந்தும் தீபாவளிக்கு ரிலீஸான இந்தப் படம் தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. அந்தளவுக்கு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற கைதி திரைப்படத்தை இந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஷில்பாசிஷ் சர்க்கார், “கைதி ஒரு த்ரில்லர் படமாகவும், நாம் இதுவரை கொண்டாடிய போலீஸ் டிபார்ட்மென்டின் சாகச ஹீரோக்களுக்கும் நன்றி செலுத்தும் படமாகவும் இருக்கிறது. ஆனால், இப்படியொரு திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். எனவே, இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து, ஒரிஜினல் திரைப்படத்துக்கு நேர்மையாகப் படமாக்கக்கூடிய டீமுடன் நாங்கள் களமிறங்குவோம் என முழுவதும் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *