பாலியல் குற்றச்சாட்டு: ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்!

Published On:

| By Selvam

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு இன்று (மே 13) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி-யும், முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பிரஜ்வல் பாலியல் தொந்தரவு செய்ததாக 25 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹாசன் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல, ஹெச்.டி.ரேவண்ணாவின் இல்லத்தில் வேலை செய்த பணிப்பெண் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி காணாமல் போனதாக அப்பெண்ணின் மகள் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் ஹெச்.டி.ரேவண்ணா மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த இரண்டு வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவருக்கு எதிராக எஸ்ஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி ஹெச்.டி.ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை மே 4-ஆம் தேதி  விசாரித்த நீதிபதிகள் ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தனர்.

இதனையடுத்து எஸ்ஐடி போலீசார் ஹெச்.டி.ரேவண்ணாவை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், ஜாமீன் கேட்டு ஹெச்.டி.ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சந்தோஷ் கஜனன் பத், ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 5 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயக்குமார் தனசிங் வழக்கு… சபாநாயகரிடம் விசாரணையா? – ஐஜி பதில்!

நடிகர் சங்க கட்டிட பணிக்கு தனுஷ் கொடுத்த ஃபண்ட் – எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel