ஜெயக்குமார் தனசிங் வழக்கு… சபாநாயகரிடம் விசாரணையா? – ஐஜி பதில்!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கில் சபாநாயகர் அப்பாவுவிடம் தேவை ஏற்பட்டால் விசாரணை நடத்துவோம் என்று தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று (மே 13) தெரிவித்துள்ளார்.
கடந்த மே 4-ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் உடல் அவரது சொந்த ஊரான கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க, நெல்லை எஸ்பி சிலம்பரசன் உத்தரவில், ஏழு தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வழக்கை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக கண்காணித்து வருகிறார். வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிவிடலாமா என்று போலீஸ் உயரதிகாரிகள் சிலம்பரசனிடம் ஆலோசித்திருக்கிறார்கள்.
அதற்கு மே 12-ஆம் தேதி வரை சிலம்பரசன் அவகாசம் கேட்டிருந்தார். இதுகுறித்து கடந்த மே 10-ஆம் தேதி அவகாசம் கேட்கும் எஸ்.பி…சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு? என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
எஸ்.பி சிலம்பரசன் கேட்ட அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில், இன்று தென் மண்டல ஐஜி கண்ணன் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல ஐஜி கண்ணன், “ஜெயக்குமாரின் உடல் கருகிய நிலையில் கிடைத்தது. அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினோம்.
அவர் எழுதிய லெட்டரை அடிப்படையாக கொண்டு விசாரணையை தொடங்கினோம். முழுமையாக தற்கொலை என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. மேன் மிஸ்ஸிங் கேஸை சந்தேக மரணம் என்று மாற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில்… முதுகுப்புறத்திலும் பின்னங்காலும் எரியவில்லை. காலிலும் உடம்பிலும் லூசாக கம்பி சுத்தப்பட்டிருந்தது. மேலும், உடம்பில் 15 செமீ X 50 செமீ கடப்பாக்கல் கட்டப்பட்டிருந்தது. பாத்திரங்கள் கழுவக்கூடிய ஸ்கிரப்பர் அவருடைய வாயில் வைக்கப்பட்டிருந்தது.
இதுதான் எங்களுக்கு கிடைத்த எவிடென்ஸ். இந்த எவிடென்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த இன்வெஸ்டிகேஷனுக்காக டிஎஸ்பி தலைமையில் 10 டீம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபைனல் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. முதற்கட்ட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மட்டுமே வந்துள்ளது.
ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் 32 பேரை குறிப்பிட்டுள்ளார். அனைவரிடமும் விசாரணை நடத்தி புலனாய்வு மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல் பல்வேறு விதமான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயக்குமார் மரணத்தில் விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை. இந்த வழக்கின் விசாரணை நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிறது. இதை விட விசாரணையை சிறப்பாக நடத்த முடியாது.
முதற்கட்ட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் கொலையா தற்கொலையா என்ற விவரங்கள் வெளியாகவில்லை, இந்த வழக்கில் எங்களுக்கு இன்னும் சில தெளிவுகள் கிடைக்க வேண்டியுள்ளது. அதனால் தான் இன்னமும் சந்தேக மரணம் என்ற பிரிவில் விசாரணை நடத்தி வருகிறோம்.
ஜெயக்குமார் எழுதியிருக்கிறார் என்பதால் அந்த கடிதத்தில் இருப்பது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொந்தக்காரர்களிடம் விசாரித்தபோது ஜெயக்குமார் கையெழுத்து தான் என்று சொல்கிறார்கள்.
ஆனால், கையெழுத்து நிபுணர்கள் மூலம் அறிவியல் பூர்வமான சோதனை நடத்திய பின்பு தான் அவர் கையெழுத்தா என்பது தெரியவரும்.
ராமஜெயம் வழக்கு என்பது எளிதாக கொலை என்ற முடிவுக்கு வர முடிந்தது. இந்த வழக்கில் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் இறுதியாக வரும்போதே கொலையா தற்கொலையா என்பது தெரியவரும்” என்றார்.
தொடர்ந்து இந்த வழக்கில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சபாநாயகர் அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அருகில் இருந்த எஸ்பி சிலம்பரசனிடம் பேசிவிட்டு பதிலளித்த ஐஜி கண்ணன், “தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தில், “ஜெய்சங்கர் இடையன்குடி சிசிஎம் பள்ளியில் கட்டிடம் கட்டின பாக்கித் தொகை சுமார் 30,00,000 ரூபாயை தராமல் தடுத்து விடுகிறார். நான் நேரில் கேட்டதற்கு அது அப்பாவு எம்எல்ஏ தான் முடிவு செய்ய வேண்டும்.
அவரிடம் பேசுங்கள் மீறி செயல்பட்டால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். தபால் அனுப்பி பணம் கேட்டு கோரிக்கை வைத்தேன். உன்னுடைய நடவடிக்கை கொலையில் தூண்டிவிடும் என்று மிரட்டினார். ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாகவே ஐஜி கண்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அரசை எதிர்த்து போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு – காரணம் இதுதான்!
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!