3விமர்சனம்: தர்பார்!

entertainment

ஒரு குற்றவாளியைப் பிடிக்க 20 போலீஸ் அடங்கிய குழு ஒன்று அவன் வீட்டுக்கே செல்கிறது. வீடு முழுவதும் தீ வைத்து எரித்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்கிறான் குற்றவாளி. அந்தத் தீயில் சிக்கி 17 போலீஸ்காரர்கள் உயிரிழந்துவிடுகிறார்கள். இதனால், காவல்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடுகிறது. போலீஸின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும், நம்பிக்கையின்மையையும் பயன்படுத்தி போதை மருந்து விற்பனையும், பாலியல் தொழிலும் மும்பை நகரத்தை சீரழிக்கிறது. இந்த குற்றங்களையெல்லாம் ஒடுக்கி, மக்களுக்கு மீண்டும் போலீஸ் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்காக புதிதாக நியமிக்கப்படும் கமிஷனராக ரஜினி வருகிறார்.

தன் மகளான நிவேதா தாமஸுடன் மும்பையில் இவர் இறங்குவதற்கு முன்பே துணை முதலமைச்சரின் மகளை சிலர் கடத்திவிடுகின்றனர். இந்த விசாரணையில் இறங்கும் ரஜினி, துணை முதல்வர் மகளுக்கு போதைப் பழக்கம் இருப்பதைக் கண்டுபிடித்து அதன்பின் அவரையும் கண்டுபிடிக்கிறார். ஆனால், இந்தத் தகவலை வெளியில் சொல்லாமல், துணை முதல்வரின் மகளைத் தேடுகிறோம் என்ற போர்வையில் மும்பை மற்றும் அதனைச் சுற்றிய நகரங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலிலிருந்து மீட்டெடுக்கின்றனர். இந்த சோதனையின்போது, மும்பையின் பிசினஸ் மேக்னட் ஒருவரின் மகனும் சிக்குகிறார். 13 வயது சிறுமிகளையும் விட்டுவைக்காத அந்தக் காமக் கொடூரனை சிறையில் அடைத்து தண்டனை வாங்கித்தருகிறார். சிறைக்குச் செல்லும் தொழிலதிபரின் மகனைக் காப்பாற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஏற்படும் பாதிப்புகளும் தான் தர்பார் திரைப்படத்தின் மீதிக்கதை.

தர்பார் படத்தின் மிக முக்கியமான தூண்கள் என்றால் அது நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் தான். இவர்கள் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பட்டாசு ரகம் தான். காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் இருவரும் ரசிக்கவைத்திருக்கின்றனர். அதிக காட்சிகள் இல்லையென்றாலும், நிவேதா தாமஸுக்கு பாராட்டு கிடைப்பது உறுதி. அதேசமயம், பல கோடிகளுக்கு இந்தப் படத்தில் கமிட் ஆன நயன்தாரா படம் முழுக்கவும் என்ன செய்தார் என்பது அவருக்கே தெரியுமா எனத் தெரியாது. காரணம் மொத்தமாக, 5 நிமிடங்கள் மட்டுமே(பாடல்கள் நீங்கலாக) படத்தில் இடம்பெறுகிறார். திரைக் கலைஞர்களுக்கு சில படங்களில் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாமோ எனத் தோன்றும். சில படங்களில் நடித்திருக்கவே வேண்டாம் எனத் தோன்றும். அதில் நயன்தாராவுக்கு தர்பார் இரண்டாவது ரகம்.

போலீஸ் டிரஸ்ஸை போட்டுவிட்டால் யாரை வேண்டுமானாலும் சுடலாம் என்று ஆதித்யா அருணாச்சலம் நினைத்திருந்தது போல, இயக்குநராகிவிட்டால் என்னவேண்டுமென்றாலும் எடுக்கலாம் என்ற முடிவில் படம் எடுத்திருக்கிறார் முருகதாஸ்.

ஒரு காட்சியில், மகனை அழைத்துச் செல்ல வந்திருக்கும் பெண்மணி ஒருவரைப் பார்த்து ‘லேடீஸ் எல்லாம் ஏன் போலீஸ் ஸ்டேஷன் வந்துக்கிட்டு?’ என்று வசனம் வருகிறது. ஏன், பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகக்கூடாதா?

கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளை மீட்டெடுக்கும்போது, ‘இவனை செருப்பால் அடிம்மா’ என்று சொல்லி, அந்தப் பெண்ணுக்கு கட்டளையிடுகிறார் ரஜினி. உடனே, அந்தப் பெண்ணும் செருப்பால் அடிக்கிறார். இப்படிப்பட்ட இன்ஸ்டண்ட் தண்டனையை வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ஆனால், அடுத்த நாளுக்குள் அந்த சிறுமிகளை மிரட்டி வழக்கிலிருந்து பின்வாங்க வைக்கின்றனர் குற்றவாளிகள். இவர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்கெட்ச் போட்டுப் பிடித்து நீதிமன்றத்திடம் ஒப்படைத்து ஜெயிலில் அடைக்கிறார். அங்கே பாலியல் குற்றவாளிக்கு பதிலாக வேறொரு இளைஞனை ஆள்மாறாட்டம் செய்ததை அறிந்ததும் மீண்டும் கோபப்பட்டு, இவரே வில்லனுக்கு ஐடியா கொடுத்து கொன்றுவிடுகிறார்.

படம் முழுவதும் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் பிரச்னை பற்றிப் பேசிவிட்டு, நயன்தாரா எங்கு சென்றாலும் துரத்திச் சென்று அடாவடி செய்கிறார். இப்படியொருவர் தன்னை தொந்தரவு செய்கிறார் என புகார் கொடுக்கச் செல்லும் இடத்தில் தொந்தரவு கொடுத்தவரே கமிஷனராக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் நயன்தாரா. ஆனால், ஆதித்யா அருணாச்சலம் நல்லவர் என்பதால் அவருடன் உடனே காஃபி கடையில் பேச சம்மதித்து, பிடித்த கலர் பற்றியெல்லாம் பேசுகிறார். இப்படிப்பட்ட பலரிடம் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த பெண்கள் மெயின்ரோட்டிலேயே நின்றுகொண்டிருக்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் பேசாமல் சைலண்டாக ஒதுங்கிக்கொண்டார் முருகதாஸ்.

இவையெல்லாம் என்னை பாதிக்காது என்று நீங்கள் விரும்பினால் தர்பார் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். ஆனால், உங்கள் வீட்டில் போலீஸாக வேண்டும் என்ற கனவுடன் யாராவது இருந்தால், ‘ஸ்டிரைக் செய்வோம்’, ‘என்னைத் தொட்டால் உன் குடும்பத்தையே அழித்துவிடுவேன்’, ‘என் பதவியை நானாக விட்டுத்தரவில்லை என்றால் வேறு எந்த போலீஸும் இங்கு வரமாட்டார்கள்’ என அரசாங்கத்தையே மிரட்டுவது போன்ற வசனங்களையெல்லாம் அவர்கள் பார்க்க வேண்டியதிருக்கும்.

கிராமம், ஊராட்சி, வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என ஒவ்வொரு கட்டமைப்புக்குள்ளும் பாதுகாப்புக்காக ஒரு இடம் இருக்கும். இங்கெல்லாமும் அநீதி இழைக்கப்பட்டால், மனிதன் என்றதன் அடிப்படையில் மக்கள் சென்று நிற்கும் இடம் மனித உரிமை அமைப்பு. ஆனால், போலீஸ் என்கவுண்டரை விசாரிக்க வரும் மனித உரிமை ஆணையரையே காக்கி உடையில் இருக்கும் ரஜினி துப்பாக்கி முனையில் கையெழுத்து கேட்பதும், அதற்கு பயந்து அவர் கையெழுத்திடுவதும் என முருகதாஸின் அராஜகங்கள் அதிகம். பதவியிலிருக்கும் மனிதனின் குணங்கள் மாறலாம்; அவர்களை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம். ஆனால், அந்தப் பதவியையே கேலிக்குரியதாக மாற்றுவது எப்படி சரியாகும்.

போதை மருந்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, போலீஸைக் கொல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்துவிட்டு, இவர்களுக்கு நிழல் கொடுக்கும் அரசியல்வாதிகளை கண்டும் காணாமல் விடுவது குறைந்தபட்ச பொறுப்பு இருப்பவர்களால் செய்யமுடியாத ஒன்று. ஆனால், இதனை ஆதித்யா அருணாச்சலமும், முருகதாஸும் ஜாலியாக செய்திருக்கின்றனர். இப்படிப்பட்ட மனநிலையை மக்களிடம் உருவாக்கி, பிறகு என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளுவதற்கு ஏதுவாக பல காரணங்களை அடுக்குவதாலேயே மனித உரிமைகள் ஆணையம் போன்றவற்றை நிஜத்தில் உருவாக்கி பாதுகாப்பு அரண்களாக வைத்திருக்கின்றனர். இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் தர்பார் ஒரு பிரைவேட் பார்ட்டி தானே தவிர, தமிழ் சினிமாவின் ரசிகக் கூட்டம் கூடிக் கண்டு கும்மாளமிடும் திருவிழாவாக உருவாகவில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *