eஅட்டப்பாடி தொடங்கி அவார்டு மேடை தேடி!

entertainment

பிரித்திவி ராஜ், பிஜு மேனன் முக்கிய வேடங்களில் நடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ என்னும் மலையாளத் திரைப்படம் மிகக் குறுகிய நாட்களில் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்.

‘நஞ்சியம்மா’ என்பவர் பாடிய ‘களக்காத்த சந்தனமேரம்’ எனத்தொடங்கும் பாடல் யூடியூப், ஃபேஸ்புக், டிக் டாக் என்று சமூக வலைதளங்களின் வைரல் லிஸ்ட்டில் இடம்பெற்று டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. யூடியூப்பில் 38 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்தப் பாடலை ஒரு லட்சத்து ஐம்பத்து மூன்றாயிரம் பேர் லைக் செய்துள்ளனர். ‘இந்த அளவுக்கு அனைவரது அன்பையும் சம்பாதிக்க இந்தப் பாடலில் அப்படி என்ன இருக்கிறது?’ என்ற கேள்வி பாடலைக் கேட்காத அனைவரது மனத்திலும் எழுந்தது.

பாடலின் வரிகள், பாடலின் இசை, பாடியவர், பாடியவரின் அப்பாவித்தனம் என அனைத்தும் சேர்ந்ததால்தான் ‘களக்காத்த’ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

கேரளாவில் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் சமத்துவமும் பாராட்டும் அட்டப்பாடி என்னும் ஆதிவாசி கிராமத்தில் இருந்து வந்தவர் நஞ்சியம்மா. தான் பாடிய பாடல் திரைப்படத்தில் வரப்போகிறது என்பதை அறியாத அந்த அம்மாவுக்கு, தான் அதே படத்தில் நடித்திருக்கிறேன் என்பது கூடத் தெரியவில்லை. ‘உங்களுக்கு பிரித்திவி ராஜைத் தெரியுமா, உங்களுக்கு பிஜு மேனனைத் தெரியுமா என்று மலையாளத்தின் முன்னணி நடிகர் ஒருவர் தன்னைப் பற்றிக் கேட்கும் கேள்விகளுக்கு, ‘அறியில்ல மக்களே’ என தெரியாது என்ற பதிலைத் தெளிவு நிறைந்த புன்முறுவலுடன் கூறுகிறார்.

கேரள அரசின் கிராமியக் கலைகளுக்கான ஃபோக்லோர் விருதையும் இவர் பெற்றுள்ளார். அட்டப்பாடியில் இருந்து அவார்டு மேடை நோக்கிய இவரது பயணம் அத்தனை எளிமையானதாக இருந்து விடவில்லை. பெரிய மேடைகளில் பாட வேண்டும் என்ற கனவு தனக்குள் இருந்ததாகக் கூறும் இவர், பாட வேண்டும் என்று கூப்பிடும்போது இடமும் நேரமும் யோசிக்காமல் அவர்களுடன் சென்று விடுவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அவ்வாறு எதற்காகப் பாடுகிறோம் என்று தெரியாமலேயே இவர் பாடிய இந்தப் பாடல்தான் முன்னணி நடிகரின் படத்துக்கு மிகப் பெரிய புரொமோஷனாக மாறியது என்ற விஷயம், இப்போதுகூட இவருக்குப் புரியவில்லை. பாடலும், பாடலைப் பாடிய பாட்டியும் வைரலானதும் பல யூடியூப் சேனல்களும் இவரைப் பேட்டி எடுக்க அட்டப்பாடிக்குப் புறப்பட்டனர். ஒவ்வொரு பேட்டியைப் பார்க்கும்போதும் இவர் மீதான அன்பு மேலும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

பாடல் பாடிய அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று கேட்டால், “பழனிசாமி வந்து பாட வர்றீங்களா என்று கேட்டான். இதோ வருகிறேன் என்று ரெடியாகி சென்று விட்டேன். பெரிய இடத்தில் மைக் முன்னால் பாடச் சொன்னார்கள். பாடி முடித்து இரவு பத்து மணிக்கு கிளம்பிய நாங்கள் வீடு வந்து சேர அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டது” என்று அப்பாவியாகப் பதிலளிக்கிறார். “மற்றொரு நாள், நீங்கள் பாடுவதை வீடியோ எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால் என்னை எல்லாம் வீடியோ புடிக்கப் போறீங்களா என்று ஆச்சரியமாகக் கேட்டேன்” என்று இவர் கூறுவதைக் கேட்கும்போது நம்மை அறியாமலே இவர் மீது ஒரு பாசம் வந்துவிடுகிறது.

இதில் இவர் கூறும் பழனிசாமி, அட்டப்பாடியில் வனத் துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் திரைப்படம் வழியாக பழனிசாமியின் பெரும் ஆசை ஒன்றும் நிறைவேறியுள்ளது. சினிமா கனவுகளை மனத்தில் மடித்துவைத்து வனத்தைக் காதலிக்க ஆரம்பித்த பழனிசாமிக்கும் ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திரைப்படத்தில் நடித்தது குறித்துக் கேட்கும்போது, “நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்று தெரிந்ததும் என்னிடம், உங்களுக்கு பயமாக இல்லையா என்று உறவினர்கள் கேட்டார்கள். நான் எதற்காக பயப்பட வேண்டும். எனது ஆசை, அது எனது மனதுக்குள் மட்டும் இருந்தால் யாருக்கு என்ன பயன்? அது என் மனதுக்குள் இருந்த வரை ஓர் அழுத்தமாகத்தான் இருந்தது. இப்போது அதையும் வெளியே கொண்டுவந்துவிட்டேன். இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது” என்ற நஞ்சியம்மாவின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல; வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் மனக்குமுறல்.

இன்று நஞ்சியம்மா வழியாக அட்டப்பாடியின் பெயர் இணையம் எங்கும் ஒலிக்கும்போது மற்றொரு முகமும் நினைவில் வந்து போகிறது. ‘மது’, திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்ட மதுவும் அதே அட்டாப்பாடியின் அன்பு மகன்தான். இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் வெளிச்சம் கிடைக்காமல் அட்டாப்பாடியின் மலை இருளுக்குள் மறைந்து இருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால் பெயர் கூடத் தெரியாத எத்தனையோ மலைக்கிராமங்களும், மகா மனிதர்களும் நம் தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சென்று விட முடியாது.

இங்கும் வாய்ப்புகள் கிடைத்து திறமைகள் மேடை ஏறட்டுமே!

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *