kமீண்டும் விஜய் வீட்டில் ஐடி அதிகாரிகள்!

Published On:

| By Balaji

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து விஜய்யை அழைத்து வந்து வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை மறந்து, மாஸ்டர் இசை வெளியீடு நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாஸ்டர் படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தரும் வகையில் ஐ.டி அதிகாரிகள் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகர் விஜய், ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆகியவற்றுக்கு பதிலளிக்க வருமாறு இவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அன்புச்செழியன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கங்களைக் கொடுக்க, விஜய் தரப்பில் ஆடிட்டர் மட்டும் நேரில் பதிலளித்திருந்தார்.அதன்பிறகு எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால், இந்த சோதனையை அப்படியே விட்டுவிட்டார்கள் என ரசிகர்களால் மறக்கப்பட்டது. விஜய் மாஸ்டர் இசை வெளியீட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. ஆனால், விஜய் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமாரின் வீட்டில் திடீரென சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் லலித்குமார்-விஜய் இடையே நடைபெற்றிருந்த பணப்பரிவர்த்தனைகளை குறிப்பிட்டு இந்த சோதனை நடைபெற்றதாக லலித் தரப்பில் சொல்லப்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது, சந்தேகப்படும் வகையில் எந்த பணம் மற்றும் பரிவர்த்தனையும் இல்லாததால் அவர்கள் அமைதியாக சென்றுவிட்டனர் எனச் சொல்லப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இன்று(12.03.2020) காலை 8 பேர் அடங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட டீம், விஜய் வீட்டுக்குச் சென்று சோதனை முயற்சிகளைத் தொடங்கியிருக்கின்றனர். லலித்குமாரிடமிருந்து விஜய்க்கு அனுப்பப்பட்ட பணத்தைக் குறித்து விஜய்யிடம் விசாரணை நடத்தவே இந்த சோதனையை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.

**-புகழ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share