கூமர் – விமர்சனம்!

சினிமா

இன்னொரு ’இறுதிச்சுற்று’

‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’ என்று ’வின்னர்’ படத்தில் வடிவேலு வசனம் பேசியிருப்பார். அது விளையாட்டுக்கும் பொருந்தும். என்னதான் கிண்டலாகச் சொன்னாலும், காயம் என்பது விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால், அந்த காயமே ஒருவரை விளையாட்டில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்கிறது. மீளாத ஓய்வில் தள்ளுகிறது எனும்போது, அது தரும் மன வேதனை மிகப்பெரியதாகும். உண்மையைச் சொன்னால், அப்படிப்பட்ட மிகப்பெரிய காயங்களில் இருந்து மீண்டு வருவதென்பது விளையாட்டு வீரர்களுக்கு இன்னொரு பிறப்பாக அமையும்.

அதனை அனுபவத்தில் உணர்ந்ததாலோ என்னவோ, பால்கி இயக்கியுள்ள ‘கூமர்’ படத்திற்குப் பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அதில் நடித்துள்ள சயாமி, அபிஷேக் பச்சனின் பெர்பார்மன்ஸுக்கு தலை வணங்கியிருக்கிறார்.

அந்த அதிரடி மன்னனே பாராட்டும் அளவுக்கு இப்படத்தில் அப்படியென்ன இருக்கிறது?

ஒரு வீராங்கனையின் எழுச்சி

Ghoomer Movie Review

அனினா (சயாமி கேர்) சிறு வயது முதலே கிரிக்கெட்டைத் தனது சுவாசமாகக் கொண்ட பெண். அண்டைவீட்டிலுள்ள சிறுவர்களுடன் இணைந்து தெருவில் கிரிக்கெட் ஆடிய ஆர்வம், மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் நிலைக்கு அவரை உயர்த்துகிறது. ஒருநாள் கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் அவரது விளையாட்டைப் பார்க்கிறார். அதன் தொடர்ச்சியாக, அவர் தேசிய கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி முகாமுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்.

அந்த முகாமைப் பார்வையிட வந்த அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் அனினாவின் ஆட்டத்திறன் பிடித்துப் போகிறது. ஆனால், கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் முன்னாள் வீரர் பதம் சிங் சோதி (அபிஷேக் பச்சன்) அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்குகிறார். அவரது சுழற்பந்துவீச்சு, நொடியில் அனினாவின் விக்கெட்டை காலி செய்கிறது.

அந்த நொடி, அனினாவின் மனதில் கீறல் விழுகிறது. ஆனாலும், தேர்வுக்குழுவின் முடிவில் மாற்றம் ஏதுமில்லை. அடுத்த சில நாட்களில், இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றவர்களுக்கான விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு நுழைய பதம் சிங் சோதிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதையும் மீறி உள்ளே வரும் அவர், அங்கு அனினாவைப் பார்த்ததும் ‘உன்னை எப்படி செலக்ட் பண்ணாங்க’ என்று பேசி அவமானப்படுத்துகிறார்.

அதனைத் தாங்க முடியாமல், தனது பாய்ப்ரெண்ட் ஜீத் உடன் வெளியே செல்கிறார் அனினா. செல்லும் வழியில், தானே காரை ஓட்டுவதாகச் சொல்கிறார். அதுவே அவரது வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், அனினாவின் கை துண்டாகிறது. அந்த நொடிக்குப் பிறகு, அவரது வாழ்வு கேள்விக்குரியதாகிறது;

தோழிகளையும் உறவினர்களையும் கூடச் சந்திக்க விரும்பாமல் முடங்கிப் போகிறார் அனினா. அப்போது, அவரைத் தேடி வந்து பார்க்கிறார் பதம்சிங். ’உன்னைச் சுழற்பந்துவீச்சாளர் ஆக்கிக் காட்டுகிறேன்’ என்று சொல்கிறார். அனினாவின் பாட்டி, அந்த வார்த்தைகளை ஆழமாக நம்புகிறார். அதுவே, அனினாவையும் அதற்கு உடன்படச் செய்கிறது. ஒரு பந்துவீச்சாளராக மாறி, மீண்டும் களம் காண்பது என்று முடிவு செய்கிறார்.

ஆரம்பத்தில் பதம்சிங்கை வெறுத்தாலும், மெல்ல அவரது மெனக்கெடலையும் திட்டமிடலையும் புரிந்து கொள்கிறார் அனினா. ஆனால், அந்த பயணம் இனிதாக இல்லை. பதம் சிங் தரும் ஒவ்வொரு சோதனையும் இரும்பை நீரில் கரைக்கும் விதமாக இருக்கின்றன. அதனை அனினா ஏற்றுக்கொண்டாரா? சுழற்பந்துவீச்சை கைக்கொண்டாரா? மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தாரா என்று சொல்கிறது ‘கூமர்’ படத்தின் மீதி.

இது போன்ற ஒரு படம் எப்படி முடியும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். அதனால், இப்படம் ஒரு வீராங்கனையின் எழுச்சியைப் பேசுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

’வாவ்’ சயாமி

Ghoomer Movie Review

‘கூமர்’ முழுக்க சயாமி தான் நிறைந்திருக்கிறார். பல இடங்களில் அவரது பெர்பார்மன்ஸ் ’வாவ்’ என்று சொல்லும் வகையில் உள்ளது. ஆனால், ஒரு பிரேமில் கூட அவரது நடிப்பு போரடிக்கும் வகையில் இல்லை. சேலை அணிந்துவரும் காட்சியில் கூட, ‘டாம்பாய்’ போல தென்படுவதே அவரது அபார உடல்மொழியின் வெளிப்பாட்டுக்கான உதாரணம்.

கொஞ்சம் ‘மாஸ்டர்’ விஜய், கொஞ்சம் ‘சக்தே இந்தியா’ ஷாரூக், அதுபோதாதென்று ‘இறுதிச்சுற்று’ மாதவனைக் கலந்து கட்டி அடித்திருக்கிறார் அபிஷேக் பச்சன். இறுக்கமான கதையில் ஆங்காங்கே நகைக்க வைக்கிறது அவரது பெர்பார்மன்ஸ்.

சயாமியின் காதலராக வரும் அங்கத் பேடி, பாட்டியாக நடித்த சப்னா ஆஸ்மி மற்றும் தந்தை, சகோதரர்களாக நடித்தவர்கள், திருநங்கை ரசிகாவாக வரும் இவாங்கா தாஸ், கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நடித்தவர்கள் என்று பலர் இதில் தோன்றியுள்ளனர். அதேநேரத்தில், முதன்மை பாத்திரங்களைத் தவிர வேறு எதற்கும் திரைக்கதையில் இயக்குனர் முக்கியத்துவம் தரவில்லை.

அபிஷேக் பச்சன் வீட்டு சுற்றுப்புறத்தைப் பசுமையானதாகக் காட்ட உதவியிருக்கிறது சந்தீப் சரத்தின் தயாரிப்பு வடிவமைப்பு. கிரிக்கெட் மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது விஷால் சின்ஹாவின் ஒளிப்பதிவு. நிபுண் அசோக் குப்தாவின் படத்தொகுப்பில் வேண்டாத காட்சிகள், ஷாட்கள் என்று படத்தில் எதுவும் இல்லை. அமித் திரிவேதியின் இசையில் ‘கூம் கூம் கூமர்’ பாடல் உடனடியாக ஈர்க்கிறது. அதற்கு இணையாக, முதல் மற்றும் இறுதி அரைமணி நேர பின்னணி இசை நமக்குள் குதூகலத்தை ஊட்டுகிறது.

இயக்குனர் பால்கி உடன் இணைந்து திரைக்கதை வசனத்தில் பங்காற்றியிருக்கும் ராகுல் சென்குப்தா, ரிஷி வீர்மணி இருவருமே நேர்த்தியான படமொன்றைத் தர உதவியிருக்கின்றனர்.

சயாமியின் பாத்திரம் விபத்துக்குள்ளானதும், அதற்கு யார் காரணம் என்பது திரையில் சொல்லப்பட்டிருக்கும் விதமும் மட்டுமே ஏமாற்றமளிக்கிறது. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு இனிமையான படம் பார்த்த உணர்வையே ‘கூமர்’ தரும்.

மாயாஜாலச் சுழல்

Ghoomer Movie Review

சீனிகம், பா, ஷமிதாப், பேட் மேன் போன்ற படங்களைத் தந்திருக்கும் இயக்குனர் பால்கியின் ஏழாவது திரைப்படம் இது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட படங்கள் இந்தியில் ஏற்கனவே வந்திருக்கின்றன என்றபோதும், ’கூமர்’ படத்தின் யுஎஸ்பி எதுவென்பதை தெளிவாக உணர்ந்து திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரே ஒரு ஆட்டத்தோடு ஓரம்கட்டப்பட்ட ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரரின் ஏக்கமும் இயலாமையும் சிறகடித்துப் பறக்கும் ஆசையோடு இருக்கிற இன்னாள் வீராங்கனையின் வாழ்வைச் சிதைக்கிறதா எனும் கேள்வியை முன்பாதி தாங்கி நிற்கிறது. போலவே, சாத்தியமே இல்லை என்று இந்த உலகம் கருதுகிற ஒரு மாயாஜாலத்தை, இருவரும் ஒரு புள்ளியில் இணையும்போது எவ்வாறு நிகழ்த்துகின்றனர் என்பதைச் சொல்கிறது இரண்டாம் பாதி. அதற்காக, இயற்பியலில் வரும் முடுக்குவிசைக்கான பொருளைச் செயல்விளக்கத்தோடு காட்டியிருப்பது அழகு.

இந்த படத்தில் சயாமி பந்துவீசும் விதம் பிஷன் சிங் பேடி, பி.எஸ்.சந்திரசேகர் தொடங்கி சுனில் ஜோஷி வரை பல முன்னாள் வீரர்களை நினைவூட்டுகிறது. ஒரு மாற்றுத்திறனாளியால் இந்திய அணிக்கு விளையாட முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படும்போது, வசனத்தில் சந்திரசேகரின் பங்களிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இப்படத்தைக் காணும் மாற்றுத்திறனாளிகள் கழிவிரக்கம் கொள்ளும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்படவில்லை. மாறாக, காயங்களோடு போராடி மீண்டும் விளையாட்டுக் களம் கண்ட எத்தனையோ வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்வு நம் கண் முன்னே நிழலாடுகிறது.

விக்ரமனின் ‘சூர்யவம்சம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ பார்ப்பதற்கும் இப்படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அதையே, சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ தந்த இறுக்கமான உள்ளடக்கத்துடன் பிரதி எடுக்க முனைந்திருக்கிறது. ‘கூமர்’ என்ற பெயருக்கு ‘இலக்கில்லாமல் அங்குமிங்கும் அலைதல்’ என்று பொருள் கொள்ள முடியும். அதற்கு நேரெதிராக, வெற்றி எனும் இலக்கைத் துல்லியமாகச் சாய்த்திருக்கிறது ‘கூமர்’. அந்த வகையில், இது ஒரு தன்னம்பிக்கை டானிக்.

உதய் பாடகலிங்கம்

மதுரை மாநாடு: திமுக உண்ணாவிரத தேதி மாற்றம்!

மரத்தடியில் பிரியாணி : ஜெயக்குமாரின் மதுரை பயணம்!

திமுக போராட்டம்: சென்னையில் துரைமுருகன் துவக்கி வைக்கிறார்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *