நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. இன்னும் ரிலீசுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் டிக்கெட் விற்பனைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
பல தியேட்டர்களில் அனைத்து ஷோக்களுக்குமான புக்கிங் முடிந்துவிட்டது. பல வருடங்களுக்குப் பிறகு டிக்கெட் கிடைக்காமல் அலைந்து திரிந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மேலும் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒன்பது மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு முதல் காட்சியை தொடங்க அனுமதி கேட்டு லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறத்தில் சென்னையிலுள்ள சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் லியோ படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கப்படாமலேயே இருந்தது.
இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பிக் கொண்டு இருந்த நிலையில், லியோ படத்தின் முதல் நாள் வசூலில் இருந்து 75% வசூலை தயாரிப்பு நிறுவனத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தர வேண்டும் என்ற கண்டிஷன் இருந்ததால்தான் டிக்கெட் விற்பனை தொடங்கப்படாமல் இருந்தது என்று சில தகவல்கள் வெளியானது.
அதன் பிறகு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் திடீரென பிவிஆர்-க்கு சொந்தமான திரையரங்குகளில் இரவோடு இரவாக லியோ படத்தின் டிக்கெட் விற்பனை நடத்தப்பட்டு, மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்க்கப்பட்டுள்ளது.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டிக்கெட் விற்பனையை தொடங்கி விறு விறு என விற்று முடித்துவிட்டது பிவிஆர் திரையரங்குகள்.
ஆனால் ஏஜிஎஸ் திரையரங்குகள் இன்னும் டிக்கெட் விற்பனையை ஆன்லைனில் தொடங்காமலேயே உள்ளனர்.
பிவிஆர் திரையரங்குகளை போலவே ஏஜிஎஸ் திரையரங்குகளும் திடீரென டிக்கெட் விற்பனையை தொடங்க அதிக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் உஷார் நிலையில் உள்ளனர்.
ஒருவேளை காலை 7 மணிக்கு முதல் காட்சியை திரையிட அனுமதி கிடைத்து விட்டால் டிக்கெட் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு செம லக்கு தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
பிக் பாஸ் சீசன் 7: மீண்டும் சதி திட்டம் தீட்டும் மாயா? எஸ்கேப் ஆன விஷ்ணு