மருதநாயகம் படப்பிடிப்பில் ராணி எலிசபெத் : அன்று நடந்தது என்ன?

டிரெண்டிங்

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி, அவர் நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காலமானார்.

1953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு இவர் ராணியாக பொறுப்பேற்று சுமார் 70 ஆண்டுகள் என நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தார். வின்ஸ்டன் சர்ச்சில் முதல் சமீபத்தில் பதவி ஏற்ற லிஸ் டிரஸ் வரை என 16 பிரதமர்கள் இவர் அரசியாக இருந்த காலத்தில் பிரதமராக இருந்துள்ளனர்.

கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற 16 நாடுகளில் ஜனநாயக ரீதியாக பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்த நாட்டிற்கான நிரந்தர அதிபராக ராணி எலிசபெத் இருந்தார்.

உலகின் எந்த நாட்டிற்கும் பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்யும் தகுதியை பெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், 1961, 1983 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இதில் 1997ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வருகை தந்தார். அதுவும் உலகநாயகன் கமல்ஹாசனுக்காக…

நடிகர் கமல்ஹாசனின் கனவு திரைப்படமாக இன்றளவும் உள்ளது மருதநாயகம். 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது.

அப்போதே ரூ.85 கோடி பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் அப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

queen elizabeth II attented the marudhanayagam set

மருதநாயகம் படத்துவக்கவிழாவில் ராணி!

இந்நிலையில் 1997ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் மிக பிரம்மாண்டமாக நடந்த மருதநாயகம் திரைப்பட தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார்.

அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா ஆரத்தி எடுத்து ராணியை வரவேற்றார்.

இந்த விழாவில் எலிசபெத் ராணியுடன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பாலிவுட் நடிகர் அம்ரிஷ் பூரி மற்றும் பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

queen elizabeth II attented the marudhanayagam set

ராணி எலிசபெத் சுமார் 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒருவரின் பயோகிராபி திரைப்படத்தின் தொடக்கவிழாவை பிரிட்டன் மகாராணியை வைத்தே நடத்தியதால் அப்போதே இந்த படம் சர்வதேச திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

மேலும் இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது.

queen elizabeth II attented the marudhanayagam set

மக்கள் தேவைகளை புரிந்தவர் ராணி எலிசபெத்!

பின்னர் ராணி குறித்து கமல் குறிப்பிடுகையில், ”ராணி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினர் மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டவர்கள்.

மாறிவரும் காலத்தின் ரசனைக்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பான முறையில் தங்களது வாழ்வினை அமைத்துக் கொண்டுள்ளனர்” என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும் ராணி எலிசபெத்தை அப்போது நேரில் கண்டு, ”இந்த ஆண்ட்டி ரொம்ப அழகா இருக்காங்க” என தனது மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் கூறியாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

queen elizabeth II attented the marudhanayagam set

20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சந்திப்பு!

இதனையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்தியா சார்பில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

அப்போது ராணி எலிசபெத்தை சந்தித்து கைக்குலுக்கிய கமல், மருதநாயகம் பட தொடக்கவிழாவில் அவர் கலந்துகொண்டதை நினைவூட்டினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராணி உடனான சந்திப்பை மறக்க முடியாது : பிரதமர் உருக்கம்!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *