டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இன்று (ஏப்ரல் 26) விடுப்பு எடுத்துக்கொண்டதால் பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது.
பாஜக மற்றும் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து மற்றும் சீக்கிய தெய்வங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பாஜகவிற்கு வாக்கு கேட்டதாகக் கூறி பிரதமர் மோடியை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். கடந்த 9ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிலிபித்தில் நடந்த கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி அவர் பேசினார். இந்து தெய்வங்கள் மற்றும் சீக்கிய தெய்வங்களின் பெயர்களையும், வழிபாட்டு தலங்களின் பெயர்களையும் பயன்படுத்தி அவர் வாக்கு சேகரித்தார்.
அதோடு எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பிரதமர் மோடி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
வாரணாசி தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அங்கு போட்டியிடும் பிரதமர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கை விசாரிப்பதாக அறிவிக்கபட்ட நீதிபதி சச்சின் தத்தா இன்று விடுப்பில் சென்றதால் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து வரும் 29ஆம் தேதி இந்த மனு மீண்டும் நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”விவிபேட் வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது” : திருமாவளவன்
ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!