ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இன்று (மார்ச் 27) தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். இது தொடர்பாக 2019-ல் பாஜகவைச் சேர்ந்த புருனேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மார்ச் 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இது ஜனநாயக படுகொலை என்று விமர்சித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று (மார்ச் 26) காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் உள்ள காந்தி சிலை முன்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ராஜ்காட்டில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டமானது காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 வரை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (மார்ச் 27) தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சட்டமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கும் கருப்பு உடை அணிந்து வர காங்கிரஸ் உறுப்பினர்கள் முடிவு எடுத்துள்ளார்கள். பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடையில் வரவிருப்பதாக மாமன்ற காங்கிரஸ் தலைவர் சாமுவேல் திரவியம் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியும் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோனிஷா
காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் இந்திய தூதரகங்கள்!
ஊட்டியில் தொடரும் தோட்டக்கலைத் துறையினரின் போராட்டம்!